செய்திகள்
கொளத்தூர் தொகுதி மக்களுக்கு, மு.க.ஸ்டாலின் முக கவசங்களை வழங்கியபோது எடுத்த படம்

கொளத்தூர் தொகுதி மக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் - முக ஸ்டாலின்

Published On 2020-04-04 03:51 GMT   |   Update On 2020-04-04 03:51 GMT
கொளத்தூர் தொகுதி மக்களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:

தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். 6-வது மண்டல அலுவலகத்தில் 1,000 தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த 7 நாட்களாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை சிற்றுண்டியை மு.க.ஸ்டாலின் நேரடியாக வழங்கியதோடு, கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். அதோடு, அவர்களது குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கினார். பின்னர், அருகில் இருக்கும் காய்கறி அங்காடியை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், காய்கறிகளின் வரத்து மற்றும் விலையேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.

ஊரடங்கால் அவதிக்குள்ளாகி இருக்கும் வெளிமாநில மக்களுக்கு, உணவு மற்றும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியதோடு, அவர்களுக்கு தேவையான ஆடைகள், போர்வைகள் மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சோப்பு, பற்பசை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார். அதோடு, மருத்துவர் குழுவினைக் கொண்டு அவர்களுக்கென மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 500 ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூ.500 உதவித்தொகை, அவர்களது குடும்பங்களுக்கு தேவையான 5 கிலோ அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் சமூக இடைவெளி முறையை பின்பற்றி வழங்கினார்.

அமுதம் பல்பொருள் சிறப்பு அங்காடியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் கூட்டமாக குவிந்திருந்த மக்களிடம் சமூக இடைவெளியின் அவசியத்தை எடுத்துரைத்து, அங்கு கூடியிருந்த அனைத்து பொதுமக்களுக்கும் முக கவசங்களை வழங்கினார். அதோடு, அந்த நியாய விலைக்கடையின் ஊழியருக்கும் முக கவசம், சானிடைசர் (கை கழுவும் திரவம்) ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர், பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு சென்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முக கவசங்களை தொடர்ந்து மாற்ற வேண்டிய அவசியமிருப்பதால், காவல்துறையினருக்கு அடிக்கடி மாற்றுவதற்குத் தேவையான முக கவசங்கள் மற்றும் சானிடைசர்களை வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News