செய்திகள்
ராமதாஸ்

போலீசார், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் - ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2020-04-04 03:48 GMT   |   Update On 2020-04-04 03:48 GMT
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு பணிகளில் அரசு டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள் காட்டும் தன்னலமற்ற ஈடுபாடும், தங்களின் உயிரை பணயம் வைத்து பணி செய்யும் அர்ப்பணிப்பு உணர்வும் பாராட்டத்தக்கவை. அதேபோல், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் காட்டும் தியாக உணர்வும் உன்னதமானவை.

இத்தகைய டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார். இத்தகைய பணி அங்கீகாரமும், சிறப்பு ஊதியமும் இன்னும் பல பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டும்.

அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் கொரோனா என்ற கொடிய கிருமி தமிழகத்தில் பரவிவிடக்கூடாது என்பதற்காக தங்களின் குடும்பங்களை விட்டுவிட்டு இரவு, பகலாக சாலைகளில் காவல் காத்தும், கண்காணித்தும் வருகிற போலீசார். பணியின்போது கொரோனா தாக்கும் ஆபத்து இருக்கும் போதிலும், அதை பொருட்படுத்தாமல் துணிந்து பணியாற்றுகின்றனர். ஊரடங்கு 90 சதவீதத்துக்கும் மேல் வெற்றி பெற்றிருப்பதற்கு காவல்துறைதான் முக்கிய காரணமாகும்.

அதேபோல், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவத் துறையினருக்கு உறுதுணையாக 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். கொரோனா பரவ சிறிதும் வாய்ப்பளித்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தூய்மைப்பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் தியாகத்தையும், தன்னலமற்ற சேவையையும் அங்கீகரிக்கும் வகையில் ஒருமாத சிறப்பு ஊதியமும், ரூ.50 லட்சத்திற்கான காப்பீடும் வழங்க வேண்டும். அத்துடன் காவலர் நிலையில் உள்ளவர்களுக்கு எரிபொருள்படி வழங்க அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News