செய்திகள்
கொரோனா வைரஸ்

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் 74 பேருக்கு சிகிச்சை

Published On 2020-04-03 10:58 GMT   |   Update On 2020-04-03 10:58 GMT
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட 74 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 440 படுக்கைகளும், 6 தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீதம் ஒதுக்கீடாக 171 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் 13 வென்டிலேட்டர்களும், தனியார் மருத்துவமனைகளில் 10 வென்டிலேட்டர்களும் தயார்நிலையில் உள்ளன.

மாவட்டத்தில் ஒரு தலைமை அரசு மருத்துவமனையும், 13 அரசு மருத்துவமனைகளும், 65 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 7 தொழிலாளர் நல சிகிச்சை மருத்துவமனைகளும் உள்ளன. இவற்றில் 165 மருத்துவர்களும், 676 செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் 1339 படுக்கை வசதிகள் உள்ளன. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு செயல்பட்டு வருகிறது.

கொரோனா அறிகுறியுடன் வருபவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இன்று காலை வரை இந்த சிறப்பு பிரிவில் 74 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில், டெல்லியிலிருந்து திரும்பிய கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த 3 பேர், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து திரும்பிய சிலுவத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியிலிருந்து வந்த ஒருவர் என மொத்தம் 5 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று குறித்த பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து திரும்பியுள்ள நிலக்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த 21 பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு இன்று தெரியும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News