செய்திகள்
பறக்கும் கேமரா

தெருக்களில் நடமாடுபவர்கள் பறக்கும் கேமரா மூலம் கண்காணிப்பு

Published On 2020-04-02 11:30 GMT   |   Update On 2020-04-02 11:30 GMT
கொரோனா பீதியை மறந்து வெளியில் சுற்றி திரிபவர்களை போலீசார் பறக்கும் கேமராக்கள் மூலமாக கண்காணிக்க திட்டமிட்டனர்.

கொரோனா பீதியை மறந்து வெளியில் சுற்றி திரிபவர்களை தமிழகம் முழுவதும் போலீசார் முக்கிய சாலைகளில் நின்று தடுத்து திருப்பி அனுப்புகிறார்கள். இதனால் பல இடங்களில் பொதுமக்கள் சாலைகளுக்கு வராமல் தெருக்களிலேயே திரிவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 179 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையை பொறுத்த வரையில் இளைஞர்கள் தங்களது தெருக்களில் பல இடங்களில் மோட்டார் சைக்கிள்களில் கும்பலாக சுற்றித்திரிவது தெரியவந்தது. இதுபோன்று தெருக்களில் சுற்றுபவர்களை போலீசாரால் நேரடியாக சென்று தடுப்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

ஒவ்வொரு தெருக்களிலும் போய் போலீசாரால் முழுமையாக கண்காணிக்க முடியாது. இப்படி தெருக்களில் சுற்றுபவர்கள் மூலமாகவும் கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போலீசார் பறக்கும் கேமராக்கள் மூலமாக கண்காணிக்க திட்டமிட்டனர். இதன்படி கோட்டூர்புரம் பகுதியில் சிறிய குட்டி விமானத்தில் கேமராவை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்கள் அனைத்திலும் இதுபோன்ற கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதனை போலீஸ் அதிகாரிகள் தங்களது செல்போனில் கண்காணிக்கும் வகையிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 

பறக்கும் கேமரா மூலம் எந்ததெருக்களில் தேவையில்லாமல் மக்கள் கூடுகிறார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பொதுமக்கள் கூடும் தெருக்களுக்கு ரோந்து வாகனங்களை அனுப்பி வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோட்டூர்புரம் பகுதியில் துவங்கப்பட்ட இந்த கண்காணிப்பு சென்னையில் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது.

தென்சென்னை கூடுதல் கமி‌ஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் கோட்டூர் புரத்தில் பறக்கும் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

Tags:    

Similar News