செய்திகள்
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த 5 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2020-04-01 11:36 GMT   |   Update On 2020-04-01 11:36 GMT
டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த 5 பேர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினரையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து வருகிறார்கள்.

சென்னை:

டெல்லி நிஜாமுதீனில் கடந்த மாதம் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மத ரீதியான மாநாடு நடந்தது. இதில் பங்கேற்று திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த 50 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இந்த மாநாட்டில் பங்கேற்று தமிழகத்துக்கு 1,131 பேர் திரும்பி வந்துள்ளனர். இவர்களில் 515 பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர்களை அடையாளம் காணும் பணியை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பி இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த 2 பேர், தண்டையார்பேட்டையை சேர்ந்த 2 பேர் மற்றும் திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் உள்ள ஒருவர் என 5 பேரை அதிகாரிகள் கண்டுபிடித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

அவர்களது ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்த பின்னரே அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும்.

மேலும் அந்த 5 பேரின் குடும்பத்தினரையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேரும் மாநாட்டுக்கு சென்று வந்த பின்னர் பல்வேறு இடங்குளுக்கு சென்று வந்து இருக்கிறார்கள். அவர்கள் எந்தெந்த இடங்களுக்கு சென்று வந்தார்கள் என்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். அவர்களுடன் நெருங்கி பழகியவர்களையும் பரிசோதிக்க முடிவு செய்து உள்ளனர்.

இதேபோல் சென்னையைச் சேர்ந்த மேலும் சிலரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News