செய்திகள்
ரிசர்வ் வங்கி

வங்கிகள் நாளை முதல் முழுமையாக செயல்படும்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Published On 2020-04-01 08:31 GMT   |   Update On 2020-04-01 08:31 GMT
பொது மக்கள் வங்கிக்கு சென்று பணம் பெற வேண்டியுள்ளதால் அனைத்து வங்கிகளும் நாளை முதல் முழுமையாக செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கொரோனா வைரசை தடுக்கும் நடவடிக்கையாக வங்கி சேவைகளும் குறைக்கப்பட்டன. குறைந்த அளவில் வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.

வங்கியின் வேலை நேரம் காலை 10 மணியில் இருந்து 2 மணி வரை குறைக்கப்பட்டது. பொது மக்கள் அவசர தேவைக்கு மட்டும் வங்கிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றுதல் உள்ளிட்ட முக்கிய சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டன.

அனைத்து கடன் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஒரு வாரம் வங்கி சேவை குறைக்கப்பட்டு இருந்தன. பொது மக்கள் அவசர தேவைகளுக்கு ஏ.டி.எம். மையங்களை பயன்படுத்தினர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ள மக்கள், கூலி தொழிலாளர்கள், பெண்கள், ஏழைகள் வருவாய் இல்லாமல் கடுமையாக பாதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதால் மத்திய அரசு 3 மாதங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.


அவர்களது வங்கி கணக்குகளில் 3 மாதங்களுக்கு தலா ரூ.500 வீதம் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.500 வீதம் 3 மாதங்களுக்கு வங்கியில் பணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் கூலி தொழிலாளர்களுக்கு, ஏழைகளுக்கு இந்த உதவிகள் வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. இதனால் ஏப்ரல் முதல் வாரத்தில் வங்கிகளில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பொது மக்கள் வங்கிக்கு சென்று பணம் பெற வேண்டியது இருப்பதால் வங்கி சேவையை வழக்கமான சேவையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளும் நாளை (2-ந்தேதி) முதல் முழுமையாக செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வங்கி சேவை ஒருவாரம் குறைக்கப்பட்டு இருந்தது. நாளை முதல் மீண்டும் வழக்கமான சேவைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவிகளை வங்கிகள் மூலமாக வழங்கி வருகிறார்.

அந்த நிதிகளை வழங்குவதற்கு வங்கிகள் முழுமையாக செயல்பட்டு ஆக வேண்டும். இன்று வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்த போதிலும் வாடிக்கையாளர்களுக்கான சேவை கிடையாது. வங்கி கணக்குகள் இன்று முடிக்கப்படுகின்றன. நாளை முதல் முழுமையாக வங்கிகள் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News