செய்திகள்
தமிழக அரசு

வீட்டு வாடகை செலுத்த சலுகை - கொரோனா பாதிப்பை தொடர்ந்து தமிழக அரசு அறிவிப்பு

Published On 2020-04-01 02:23 GMT   |   Update On 2020-04-01 02:23 GMT
கொரோனா பாதிப்பை தொடர்ந்து கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ள தமிழக அரசு, வீட்டு வாடகை செலுத்தவும் சலுகை வழங்கி இருக்கிறது.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பதால் மக்கள் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சில சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் கடந்த 30-ந் தேதி கலந்தாய்வு செய்த பின்னர், 31-ந் தேதி (நேற்று) நான் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி, கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றேன்.

* கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது.

* வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

* தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு தவணைத் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

* அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கடனுதவிகளுக்கான தவணைத் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

* தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

* கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம் என்ற சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுதவி பெற்றுள்ள 2 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதனத் தேவைகளுக்காக செயல்படுத்தப்படும்.

* சிப்காட் நிறுவனத்திடம் மென் கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

* சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் பராமரிப்பு கட்டணம் செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

* மோட்டார் வாகன சட்டப்படி உரிமங்கள் மற்றும் வாகன தகுதிச் சான்றுகள் (லைசென்ஸ் மற்றும் எப்.சி.) புதுப்பிக்கப்பட வேண்டிய கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

* எடைகளும், அரவைகளும் சட்டம், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், உள்ளாட்சி அமைப்புகளினால் அமல்படுத்தப்படும் கேடும் குற்றமும், பயக்கும் தொழிற்சட்டம், ஆகியவற்றின் கீழ் புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களின் கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

* உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

* தற்போது உள்ள சூழ்நிலையில், வாடகை வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்துவதில் உள்ள சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். எனவே, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகை தொகையை 2 மாதங்கள் கழித்து பெற்று கொள்ள வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதே சமயத்தில், இந்த நோய்த்தொற்று இரண்டாம் கட்டத்தில் இருப்பதாகவும், அது மூன்றாம் கட்டத்துக்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து, தங்கள் வீட்டிலேயே இருப்பது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே, அத்தியாவசிய பொருட்களை வாங்க அரசு பிறப்பித்துள்ள நேர கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும், எந்தவிதமான வதந்திகளை நீங்கள் நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே, உங்களின் நன்மைக்காகவும், உங்கள் குடும்பத்தின் நன்மைக்காகவும், நம் நாட்டின் நன்மைக்காகவும், பொதுமக்கள் அனைவரும் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விழித்திருப்போம், விலகி இருப்போம். வீட்டிலேயே இருப்போம், கொரோனாவை வெல்வோம்.

இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். 
Tags:    

Similar News