செய்திகள்
கோப்பு படம்.

சப்ளை செய்ய முடியாததால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 1¼ கோடி லிட்டர் பால் தேக்கம்

Published On 2020-03-31 10:39 GMT   |   Update On 2020-03-31 10:39 GMT
கொரோனாவுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டில் பால் சப்ளை செய்ய முடிய வில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் 1¼ கோடி லிட்டர் பால் தேக்கம் அடைந்து வருகிறது.

சென்னை:

கொரோனாவுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் சப்ளையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பால் சப்ளையும் பாதிப்பை சந்தித்து உள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை.

மேலும் ஓட்டல்கள், டீக்கடைகள், சுவீட் ஸ்டால்கள், பேக்கரிகள் ஆகியவற்றுக்கு பெருமளவு பால் சப்ளை செய்யப்படும். அவையெல்லாம் மூடிக் கிடக்கின்றன. இதனாலும் பாலை வாங்க ஆள் இல்லை. ஒவ்வொரு நாளும் அதிக அளவில் பால் தேகம் அடைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 2 கோடியே 10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 45 லட்சம் லிட்டர் ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளுக்கு அனுப்பப்படும். 65 லட்சம் லிட்டர் நெய், பால் பவுடர், வெண்ணை, இனிப்பு பண்டங்கள் தயாரிப்பு போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும்.

மீதி பால் பொதுமக்கள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும். ஆனால் இப்போது இந்த இடங்களுக்கு அனுப்பப்படும் பால் சப்ளை பெரும்பாலும் நின்றுவிட்டது.

இதனால் ஒவ்வொரு நாளும் 1¼ கோடி லிட்டர் பால் தேக்கம் அடைந்து வருகிறது. பால் தேக்கம் அடைவதால் அதன் கொள்முதல் விலையை தனியார் பால் நிறுவனங்கள் குறைத்து விட்டன. ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்பு 1 லிட்டர் பால் ரூ. 32-லிருந்து 34 வரை விலையில் கொள்முதல் விவசாயிகளிடம் இருந்து செய்யப்பட்டது.

மேலும் மாதாந்திர ஊக்கத் தொகையும் வழங்கினார்கள். ஆனால் இப்போது விலையை குறைத்து விட்டனர். 1 லிட்டர் பால் ரூ.26-லிருந்து ரூ. 28 என்ற விலையிலேயே கொள்முதல் செய்கிறார்கள்.

இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தேக்கமடையும் பாலை என்ன செய்வது என்று தெரியவில்லை. அவை வீணாகி வருகின்றன. இதுசம்பந்தமாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:-

தனியார் பால் நிறுவனங்களுக்கு சப்ளை செய்து வந்த விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறர்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.200 வரை இழப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் மாடுகள் பராமரிப்பு செலவு அதே நிலையில் தான் உள்ளது.

தனியார் பால் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்து அவற்றை விற்பனைக்கு அனுப்புவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. மேலும் அதை பால் பவுடராக தயாரிப்பதிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. பாலை வேறு இடங்களுக்கு அனுப்புவதற்கு போக்கு வரத்து வசதிகளும் இல்லை. அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. எனவே இதற்கு தீர்வு ஏற்பட்டால் தான் பால் கொள்முதலை செய்ய முடியும். அதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் 70 சதவீதம் வரை பால் வணிகம் சரிவடைந்துள்ளது. இதனால் பால் உற்பத்தி செய்யும் 30 லட்சம் குடும்பத்திரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி இருக்கிறது.

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் 30 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. மீதம் உள்ள பாலை தனியார் நிறுவனம் கொள்முதல் செய்தன. இப்போது தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யாததால் பெருமளவு தேகம் அடைந்து வருகிறது. எனவே தமிழக அரசு அந்த பாலை கொள்முதல் செய்து பால் பவுடராக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.80 கோடியாக மாறலாம்.

எனவே தமிழக அரசு இதில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொன்னுசாமி என்று கூறினார்.

Tags:    

Similar News