செய்திகள்
கொரோனா பாதுகாப்பு பணியில் ஊழியர்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்தது

Published On 2020-03-30 14:38 GMT   |   Update On 2020-03-30 14:38 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ராமநாதபுரம்:

கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இதன் காரணமாக கடந்த 24-ந்தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இருப்பினும் ஊரடங்கு அறிவிப்பை மக்கள் அலட்சியமாக கருதியதால் சில நாட்களுக்க முன்பு வரை மக்கள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் ஆகியோர் மக்களின் நடமாட்டத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் வந்து சென்றனர். இதை சாதகமாக்கிய சில இளைஞர்கள் மருந்துக் கடைக்குச் செல்வதாகவும் உணவுப் பொருட்கள் வாங்க செல்வதாகவும் கூறி இருசக்கர வாகனத்தில் உலா வந்தனர்.

இளைஞர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் பெரும் சிரமம் அடைந்தனர். நோயின் தாக்கத்தை விரிவாக எடுத்துக் கூறியும் அதை கண்டு கொள்ளாத நிலை தொடர்ந்தது. இதை தொடர்ந்து போலீசாரின் நடவடிக்கை தீவிரமாக பாய்ந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல், நூதன தண்டனை என பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட் டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 தாலுகாக்கள் உள்ளன. இங்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரடியாக சென்று மக்கள் நடமாட்டத்தையும் சமூக இடைவெளியையும் ஆய்வு செய்தார்.

கொரோனா வைரஸ் அரக்கனை விரட்ட கலெக்டர் வீரராகவராவ், வருண்குமார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் ஆன்மிக தலமாக உள்ளதால் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வரக்கூடிய நிலை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது.

கடைகளிலும் கட்டங்கள், வட்டங்கள் வரையப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க மாவட்ட கலெக்டர் வீரவராகவ ராவ் உத்தரவிட்டார்.இதன் எதிரொலியாக விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மீது 10-க்கும் அதிகமான கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

மக்கள் அதிகமாக கூடும் நெருக்கடியான காய்கறி கடை பகுதிகளை விசாலமான இடத்திற்கு மாற்றி அங்கு சமூக இடைவெளியை ஏற்படுத்தினார்.

போலீசார் மேற்கொண்ட ரோந்து பணிகளால் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை காண முடிந்தது.

போலீசாரும் தங்களுடைய பணிச்சுமையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வெளியே வருவதை தடுப்பதில் பெரும் பங்காற்றி வருகின்றனர். இதேபோல் வருவாய் துறை மற்றும் சுகாதாரத்துறையினர், தீயணைப்பு துறையினர் சமூக அக்கறையுடன் பணிபுரிந்து வருகின்றனர்.

இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்க்கு எவ்வித பலியும் இல்லாத நிலை காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்டத்தில் 11 தீயணைப்பு வாகனத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தெருக்களில் ஆதரவின்றி இருப்பவர்கள், மன நலம் குன்றியவர்கள் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News