செய்திகள்
கோப்பு படம்.

அன்றாட வாழ்க்கையை புரட்டி போட்ட கொரோனா: கார்- ஆட்டோ டிரைவர்கள் 6 லட்சம் பேர் வேலை இழப்பு

Published On 2020-03-30 09:56 GMT   |   Update On 2020-03-30 09:56 GMT
கொரோனா தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கார்- ஆட்டோ டிரைவர்கள் 6 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

சென்னை:

கொரோனா உலக நாடுகள் முழுவதும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் இந்த கொரோனா நோய் சாமானிய தொழிலாளர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டி போட்டுள்ளது.

நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் தமிழகத்திலும் அன்றாடம் வேலைக்கு சென்றால் தான் வாழ்க்கையை நகர்த்த முடியும் என்கிற நிலையில் உள்ள அனைத்து டிரைவர்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 24-ந்தேதி நள்ளிரவு முதல் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடாமலேயே இருக்கின்றன.

காலையில் இருந்து மாலை வரையில் வாடகைக்கு கார், ஆட்டோக்களை ஓட்டி அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை மட்டும் நம்பியே பிழைப்பு நடத்தி வந்த டிரைவர்கள்.

கடந்த 7 நாட்களாக எந்த வருமானமும் இல்லாமல் தவியாய் தவித்து வருகிறார்கள். தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கே அவர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களதுஅன்றாட குடும்ப செலவுகளுக்கும், சாப்பாட்டுக்கும் கூட அக்கம் பக்கத்தில் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு டிரைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையிலேயே இது போன்று தவிக்கும் நிலையில் இன்னும் மீதி உள்ள நாட்களை எப்படி சமாளிப்பது என்றே தெரிய வில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 85 ஆயிரம் ஆட்டோக்கள் அனுமதி பெற்று ஓட்டப்படுகிறது. இதில் 20 சதவீதம் வாரகைக்கு ஓட்டும் டிரைவர்கள்.

மீது 80 சதவீதம் பேர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்கள் என்று கூறுகிறார் ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் பால சுப்பிரமணியன்.

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் அவர் மேலும் கூறியதாவது:-

தமிழகத்தில் டிரைவர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கோரி வருகிறோம். இதன்படி ஒரு நாளைக்கு ரூ.800 என்ற விகிதத்தில் 22 நாட்களை கணக்கிட்டு ரூ.13 ஆயிரத்து 200 வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

ஆட்டோ டிரைவர்கள் நலன் கருதி தமிழக அரசு டிரைவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ள பால்சுப்பிரமணியன் தமிழக அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேன்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

சென்னையை பொறுத்த வரையில் 96 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதில் 24 ஆயிரத்து 600 ஆட்டோக்கள் மட்டுமே நல வாரியத்தில் உள்ளன.

இந்த டிரைவர்களுக்கே அரசு அறிவித்துள்ள ரூ.1000 இடைக்கும். அப்படி கணக்கெடுத்தால் மாநிலம் முழுவதும் 45 ஆயிரம் ஆட்டோ டிரைவர்கள் மட்டுமே பயன் பெறுவார்கள். எனவே அரசு நல வாரியத்தில் இல்லாத ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கார் டிரைவர்கள், வேன் டிரைவர்கள் என மொத்தம் 6 லட்சம் மேர் உள்ளனர். இவர்களில் சுற்றுலா வாகனங்களை இயக்குபவர்களும் அடக்கம். அதே நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வாகனங்களை வைத்து ஓட்டுபவர்களும் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலாளர்களாகவே கணக்கிடப்படுகிறார்கள். எனவே அனைத்து டிரைவர்களுக்கும் நிவாரண உதவியை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News