செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்

வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க கோரிக்கை

Published On 2020-03-30 09:14 GMT   |   Update On 2020-03-30 09:14 GMT
தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் போலீஸ் கெடுபிடி அதிகமாக உள்ளதால் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

இன்று தக்காளி, வெங்காயம், பச்சை காய்கறிகள் என மொத்தம் 230க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதன் காரணமாக மிகவும் குறைந்த அளவிலான வியாபாரிகள் மட்டுமே கோயம்பேடு சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்கி செல்கின்றனர். எனவே வியாபாரம் மிகவும் மந்தமாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வெங்காயம் மொத்த வியாபாரி சங்க நிர்வாகி ஜான் வர்த்தாலிஸ் கூறியதாவது:-

அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் தங்கு தடையின்றி நியாயமான விலையில் பொதுமக்கள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்று அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று மார்கெட்டிற்கு விடுமுறை அளிக்காமல் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.

கடந்த சில நாட்களாக மார்கெட் நுழைவு வாயிலில் போலீஸ் கெடுபிடி அதிகமாக உள்ளது. மார்கெட்டிற்கு வரும் சில்லரை வியாபாரிகள், பொதுமக்களின் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் வியாபாரிகள் பல இடங்களில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபடுகிறார்கள்.

இதன் காரணமாக வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   போலீஸ் கெடுபிடி அதிகமாக உள்ளதால்  வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News