செய்திகள்
காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Published On 2020-03-30 06:50 GMT   |   Update On 2020-03-30 06:50 GMT
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. சென்னையில் 9 இடங்களில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை:

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டோரை தனி வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கணக்கெடுக்கும் பணியும் நேற்று நடைபெற்றது.

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் வீடு வீடாக சுகாதாரத்துறை பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னையில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. சளி, இருமல், காய்ச்சல் யாருக்கேனும் உள்ளதா? என்ற விவரமும் சேகரிக்கப்பட்டது.

சென்னையில் ஏற்கனவே மண்டலம்-8 அண்ணா நகர் டிவிசனில் அரும்பாக்கம், புரசைவாக்கம் பகுதியில் கொரோனா வைரசால் 5 பேர் பாதிக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதி மக்கள் தேவை இல்லாமல் வெளியே வரக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

இதேபோல் மண்டலம்-9 தேனாம்பேட்டை டிவிசனில் சாந்தோம் பகுதியில் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் அந்த பகுதிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்டலம்-10 கோடம்பாக்கம் டிவிசனில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுதவிர வளசரவாக்கம் மண்டலத்தில் போரூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அப்பகுதி மக்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி பிரசாரம் செய்யப்பட்டது.

இதுதவிர ஆலந்தூர் மண்டலம் மற்றும் கோட்டூர்புரம் பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதால் அப்பகுதி மக்களும் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்று வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் மேற்கண்ட 9 இடங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததால் அவர்களது வீடுகளில் இருந்து 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உஷார் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1½ லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் சுகாதாரத்தை பேணும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று யாருக்கெல்லாம் வந்துள்ளதோ அந்த பகுதிகளில் சுகாதார ஊழி யர்கள் கண்காணிப்பு வளையம் உருவாக்கி வீடு வீடாக மற்றும் வீதி வீதியாக மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News