செய்திகள்
திருவாரூர் பகுதியில் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்

திருவாரூர் பகுதிகளில் வெளிநபர்கள் யாரும் வரவேண்டாம் என வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்

Published On 2020-03-29 11:05 GMT   |   Update On 2020-03-29 11:05 GMT
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் திருவாரூர் பகுதிகளில் வெளிநபர்கள் யாரும் வரவேண்டாம் என வீடுகளில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு 21 நாள் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுபோல் திருவாரூர் மாவட்டத்தில் 1965 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும் சமூக பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதனுடைய ஒரு கட்டமாக திருவாரூர் ஒன்றியத்தில் புலிவளம் ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் தங்கள் வீடுகளின் முன் துண்டுப்பிரசுரங்களை ஒட்டி பொதுமக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்தத் துண்டுப் பிரசுரத்தில் வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக வெளிநபர்கள் யாரும் வீட்டுக்குள் வர வேண்டாம். நான் வீட்டில் இருக்கிறேன். எனக்காக, என் நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக என அச்சடிக்கப்பட்டு வீடுகளின் முகப்பு வெளியில் ஒட்டப்பட்டுள்ளது. இது புதிய அணுகுமுறையாக இருந்தாலும் மக்களின் சுய பாதுகாப்பு முறை மேலோங்கி இருப்பதற்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Tags:    

Similar News