செய்திகள்
போலீஸ் கமிஷனர்

மதுரையில் மக்கள் கூடும் இடங்களை கண்டறிய ஆள் இல்லாத விமானம் - போலீஸ் கமிஷனர் தகவல்

Published On 2020-03-28 16:37 GMT   |   Update On 2020-03-28 16:37 GMT
மதுரையில் பொதுமக்கள் கூடும் இடங்களை அறிய ஆள் இல்லாத விமானம் பயன்படுத்தப்படும் என போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்.
மதுரை:

மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொரோனா சிறப்பு கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு உள்ளது. இதனை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய உதவிகளை, புகார்களை இந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் தெரிவிக்கலாம். இதற்கு 0452-2531044, 0452-2531045 என்ற இரு உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையம் காலை 9 மணி முதல் 6 மணி வரை செயல்படும். மதுரையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 வழக்குகள் பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 332 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்த அபராத தொகையாக 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியாக 2 ஆயிரம் போலீசார் மதுரை மாநகர் முழுவதும் பணியில் உள்ளனர்.

மதுரையின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களை அறிய 5 ஆள் இல்லாத விமானங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவசர மருத்துவ உதவிக்கு காவல் துறை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மதுரையின் பிரதான மார்க்கெட்டுகளான தயிர் மார்க்கெட், மாட்டுத்தாவணி சென்டிரல் மார்க்கெட், பரவை மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளை நகரின் பல பகுதிகளுக்கு சென்று வியாபாரம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே காய்கறி வாங்க வெளியே வர வேண்டும். அரசின் உத்தரவுப்படி அனைத்துப்பகுதிகளிலும் உள்ள அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்கும். சமூக விலகலை கடைபிடித்து பொருட்கள் வாங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News