செய்திகள்
கொரோனா வைரசை தடுக்க வேப்பிலை-மஞ்சள் கலந்த நீரை தெருக்களில் தெளித்த பொதுமக்கள்.

கொரோனா வைரசை தடுக்க வேப்பிலை-மஞ்சள் கலந்த நீரை தெருக்களில் தெளித்த பொதுமக்கள்

Published On 2020-03-28 11:17 GMT   |   Update On 2020-03-28 11:17 GMT
பெரம்பலூர் நகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட சங்குப்பேட்டை பெரியார் தெருவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை தெருக்களில் பொதுமக்கள் தெளித்தனர்.
பெரம்பலூர்:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாட்டில் ஊரடங்கு, சமூக விலகல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின்றி சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.

கிராம பகுதிகளில் பொதுமக்கள், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மஞ்சளை அரைத்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் கலந்து, அதன்மேல் வேப்பிலை வைத்து வாசலில் வைப்பது போன்றவற்றை செய்து வருகின்றனர். மேலும் வீடுகள் மற்றும் கடைகளின் முன்பு வேப்பிலைகளை கட்டியுள்ளனர். சில பகுதிகளில் வேப்பிலை தோரணம் கட்டியுள்ளனர்.

இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட சங்குப்பேட்டை பெரியார் தெருவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேப்பிலை, மஞ்சள் கலந்த நீர் தெளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேப்பிலையை அரைத்தனர். பின்னர் அதனையும், மஞ்சளையும் தண்ணீரில் கலந்து, அந்த வார்டில் உள்ள அனைத்து தெருக்களில் தெளித்தனர். அப்போது இளைஞர்கள் உள்ளிட்ட பலர் முகத்தில் துணி கட்டியிருந்தனர். சிலர் முக கவசம் அணிந்திருந்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளில் வேப்பிலையை தோரணமாக கட்டியுள்ளனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முனியங்குறிச்சி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் நலன்கருதி ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கணேசன் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மஞ்சள்தூள், வேப்பிலை, கற்றாழை, கிருமி நாசினி ஆகியவை கலந்த தண்ணீர் தயார் செய்யப்பட்டது. அதனை பொதுமக்கள் முனியங்குறிச்சி கிராமத்தில் தெரு, தெருவாக சென்று தெளித்தனர். இதே போல் ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீர் தெளிக்கப்பட உள்ளது. 
Tags:    

Similar News