செய்திகள்
கலெக்டர் கண்ணன்

மருத்துவம் சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுமதி - கலெக்டர் தகவல்

Published On 2020-03-28 09:41 GMT   |   Update On 2020-03-28 09:41 GMT
விருதுநகர் மாவட்டம் முழுவதும் மருத்துவம் சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.
விருதுநகர்:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது 14-ந் தேதி வரை அமலில் இருக்கும். இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் செயல்பட காலவரையறை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை விற்பனை மற்றும் வினியோகத்துக்கும் தடை ஏதும் விதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகள் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் அனைத்தும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில் தனியார் நூற்பாலைகள் மற்றும் பாலிதீன் ஆலைகள் செயல்படுவதாக புகார் கூறப்பட்டது.

இதுபற்றி கலெக்டர் கண்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளபடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாகனங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறிகடைகள், அரிசி கடைகள், இறைச்சி கடைகள் ஆகியவை தவிர இதர வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

காலை 9 மணி வரை தனியார் மற்றும் ஆவின் பால் வினியோகம் தடையில்லாமல் நடந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்வோருக்கு எவ்வித இடையூறும் செய்வதில்லை.

மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நூற்பாலைகள் இயங்கவில்லை. அரசு உத்தரவுப்படி மருத்துவம் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் ஆலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படுவதற்கு உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவைக்கான கையுறை, முக கவசம், அதற்கான துணி ஆகியவற்றை தயாரிக்கும் ஆலைகள் செயல்படாவிட்டால் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். எனவே அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஆலைகளும் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்த வகையில் விதிமீறல் இருந்தாலும் விதிமீறல் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News