செய்திகள்
ராமதாஸ்

வங்கிக்கடன் வசூலை 6 மாதம் ஒத்திவைக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

Published On 2020-03-28 04:22 GMT   |   Update On 2020-03-28 04:22 GMT
பூ விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன், வங்கி கடன்களுக்கான மாதத்தவணை வசூலை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மருத்துவம் மற்றும் தூய்மை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகள், கொரோனா அச்சத்தால் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார இழப்புகளை ஈடு செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழக அரசு அடுத்தக் கட்டத்துக்கே சென்று, பொதுமக்கள் எவரும் கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும் செல்லாததால் தனியார் வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியவை வழங்கிய மாதாந்திர, வாராந்திர, தினசரி கடனுக்கான வட்டி மற்றும் அசல் வசூலை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

அதேபோல், பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளில் பல்வேறு தரப்பினரும் பெற்ற பல்வேறு வகையான கடன்களுக்கான மாதத் தவணையை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும் காப்பீட்டு பிரீமியம், கடன் அட்டை தவணைகள் ஆகியவற்றையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அரசு ஆணையிட வேண்டும்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி உள்ளிட்ட பூ வகைகளை பறித்தும், கொரோனா அச்சம் காரணமாக சந்தைப்படுத்த முடியவில்லை. வாங்க ஆளில்லை. அதனால் டன் கணக்கில் பூக்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன.

பூக்கள் குப்பையில் கொட்டப்படுவதால், பூ விவசாயிகள் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். அவர்களின் இழப்பை அரசும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்காக பூ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News