செய்திகள்
கன்னியாகுமரி அரசு மருத்துவமனை

கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு- பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை

Published On 2020-03-28 03:14 GMT   |   Update On 2020-03-28 03:14 GMT
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 38  பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மூன்றாவது உயிரிழப்பு இன்று ஏற்பட்டுள்ளது. 66 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தைச் சேர்ந்த அந்த முதியவர், கேரளாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து வந்தபின்னர் காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வந்தபிறகே, அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும்.
Tags:    

Similar News