செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியே சென்றால் கடும் நடவடிக்கை- அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

Published On 2020-03-23 05:35 GMT   |   Update On 2020-03-23 05:35 GMT
தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் அரசின் அறிவுறுத்தலை மீறி வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்து உள்ளார்.
சென்னை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் சார்பில் தீவிர சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி வரை பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்கள் உள்பட இந்தியா முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப்படுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கி இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைபெற்றது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அரசின் அறிவுரைகளை மக்கள் தீவிரமாக பின்பற்றவேண்டும் என கூறியுள்ளார். 

‘கொரோனா நிலைமையை இன்னும் மக்கள்  தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அரசு கூறியுள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். சட்டம் மற்றும் விதிகளை மாநில அரசுகள் முழுமையாக பின்பற்றவேண்டும்’ என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே,  தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் அரசின் அறிவுரையை மீறி வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். 

‘தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருகின்றனர். அவர்கள் கண்காணிக்கப்பட்டாலும், அவர்களால் சமூக பரிமாற்றத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது. 

சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிநாடு சென்று வந்த பயணிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என விஜயபாஸ்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News