கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கன்னிமாரா நூலகம் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நூலகத்தில் உள்ள வெளிப்புற வாயில் கதவில் தொங்க விடப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் கன்னிமாரா நூலகம் உள்ளது. இது 1896-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி பொது மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் பழமையான நூலகங்களின் முதன்மையானதாகவும் திகழ்கிறது.
இதற்கு அடிக்கல் நாட்டிய சென்னை மாகாண கவர்னர் கன்னிமாரா பிரபுவின் பெயரே இந்த நூலகத்துக்கு சூட்டப்பட்டது.
இந்த நூலகத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன. ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். குடிமைப்பணி தேர்வுக்கு தயாராவோருக்கு இந்த நூலகம் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
இந்த நூலகம் தீபாவளி, பொங்கல் மற்றும் 3 தேசிய விடுமுறை தினங்களுக்கு மட்டுமே இயங்காது. இது தவிர ஆண்டு முழுவதும் விடுமுறை இல்லாமல் இயங்கி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கன்னிமாரா நூலகம் நேற்று (20-ந் தேதி) முதல் மூடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நூலகத்தில் உள்ள வெளிப்புற வாயில் கதவில் தொங்க விடப்பட்டுள்ளது.
அதில் ‘கொரோனா பாதிப்பில் இருந்து பொது மக்கள் மற்றும் வாசகர்களை காக்கும் பொருட்டு மார்ச் 31-ந்தேதி வரை மூடப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகமும் மார்ச் 20-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கொரோனா பாதிப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்கள் மார்ச் 31-ந்தேதி வரை மூட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.