செய்திகள்
கோப்பு படம்

தமிழகத்தில் நாளை மறுநாள் கடைகள் அடைப்பு- வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு

Published On 2020-03-20 10:04 GMT   |   Update On 2020-03-20 10:04 GMT
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் நாளை மறுநாள் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை:

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து வருகிற 22-ந்தேதி யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள், வணிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு:-

சுயநலம் கருதாது தான் சார்ந்துள்ள சமுதாயம் தொழில் தனது நாடு என அனைத்தையும் கருத்தில் கொண்டு தன்னலமற்ற சேவையை நாட்டின் முதுகெலும்பாக இருந்து வரி, வருவாய் செலவினங்களை வழங்கிவரும் பெரும் பணியை நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தலையாய கடமை என பணியாற்றிக் கொண்டிருக்கும் தொழில் முனைவோர், தயாரிப்பாளர்கள், வணிகர்கள் என ஒரு கட்டமைப்பை தன்னுள் பொதிந்து ஜனநாயக ரீதியில் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் வணிக சமுதாயம் தனது வாழ்வாதாரம், வாழ்வுரிமை இவற்றிற்காக போராடிக்கொண்டிருக்கும் மிகவும் நெருக்கடியான இக்கால கட்டத்தில் அண்டத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மனித இனத்தினை பேரழிவினை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் பெருந்தொற்று கொரோனா வைரஸ் நோய் நமது இந்திய திருநாட்டையும் விட்டு வைக்கவில்லை. நாடு, இன, மொழி, மத பாகுபாடின்றி இன்று அனைத்தும் மனித குலம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று ஒரே நோக்கில் அனைத்து நாடுகளும் ஒரு அவசர சுகாதார நிலை பிரகடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் கொரோனா வைரஸ் பெரும் தொற்றுநோய் இரண்டாம் நிலையைத் தாண்டி சமுதாய தொற்று நோயாக உருவெடுத்துவிடாமல் தடுத் திட ஒருநாள் ஒத்திகை சமுதாய ஊரடங்கு உத்தரவு மக்கள் தங்களின் நலன்கருதி மக்களுக்காகவே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலைமையை மார்ச் 22-ந் தேதி ஞாயிறு மாலை 5 மணிக்கு தங்களின் வீட்டு வாயிலில் வந்து கைதட்டி, 5 நிமிடங்கள் கரவொலி எழுப்பி ஜனநாயக சமுதாய ஒத்திகை ஊரடங்கினை ஞாயிறு காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை சுமார் 14 மணிநேரம் கடைபிடித்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசிற்கும், அதிகாரிகளுக்கும் இருக்கின்ற சமுதாய அக்கறையில் எங்கள் வணிகர் குலம் எள்ளளவும் சளைத்ததல்ல என்பதை உளமாற நிரூபிக்க இந்த இத்தருணத்தை வணிகர்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, மார்ச் 22 ஞாயிறு அன்று ஒருநாள் பிரதமரின் ஒத்திகை ஊரடங்கை வெற்றிகரமாக நடத்தி இச்சுகாதார பேரிடர் காலத்தில் மக்கள் பணியை தொய்வின்றி தொடர்ந்திடுவோம் என உறுதி ஏற்கின்றோம்.

அதே சமயம் மத்திய மாநில அரசுகள் சமுதாய பிரதான அங்கமான வணிகர் களை இனியும் சோதித்திடாமல் வணிகர்கள் தங்கள் வாழ்வுரிமைகளை மீட்டெடுத்திட வணிகர் பேரமைப்பின் நீண்ட நெடிய காலம் தீர்க்கப்படாமல் இருக்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு, பொருளாதார இழப்பு, பணியாளர்களின் சுமை, ஜி.எஸ்.டி வரிச்சுமை, வங்கிக் கடன் இ.எம்.ஐ. சுமை, வங்கி காசோலை நிலுவை, சொத்துவரி, தண்ணீர் வரி, மின் கட்டணங்கள் செலுத்திட கால அவகாசம் அளித்து, கொரோனா வைரஸ்நோய் தொற்றிற்கு கேரள அரசு வழங்கி வரும் அவசரகால உதவிகளை, தமிழக அரசும் வணிகர்கள் மற்றும் பொது மக்களுக்கும் வழங்கிடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திடுமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

புது வகையான கொரோனா தொற்று நோய் பரவி வரும் பேராபத்து உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த ‘உயிர்க்கொல்லி’ நோயை எதிர் கொண்டு முறியடிக்க மருத்துவர் சமூகம் அர்ப் பணிப்பு உணர்வோடுகளப் பணியாற்றி வருகிறது.


ஆராய்ச்சி உலகம் நோய் தடுப்பு மற்றும் அழிப்புக்கான மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாகியுள்ளது. அரசு மருத்துவர்கள், செவிலியிவர்கள் உள்ளிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் குறைந்தபட்ச வசதிகளுடன் மன உறுதியோடு பணியாற்றி வருவது பாராட்டத்தக்கது.

கொரோனா நோய் தொற்று மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் அரசின் பொறுப்பில் இருக்க வேண்டியதை வலியுறுத்துகிறது.

மத்திய, மாநில அரசுகள் கடந்த சில நாட்களாக ‘மக்கள் ஓரிடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்’ என அறிவுறுத்தி வருகிறது. மக்கள் பெருமளவு வந்து செல்கிற பொதுத்துறை, தனியார்துறை, வங்கிகளின் செயல்படுவதிலும் நோய் தொற்று பரவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். வருகிற 22-ந்தேதி பிரதமர் அறிவித்துள்ள ‘மக்கள் ஊரடங்கில்’ அனைவரும் பங்கேற்க வேண்டுகிறது.

கொரோனா நோய் தொற்று தடுப்புக்காக தொழிற் சாலைகள், கல்வி நிலையங்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலையிழந் துள்ளனர். வருமானம் இல்லாத நிலையில் தொழிலாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேலும் பலவீனமாகும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உதவி நிதி வழங்குவது, தொழிற் சாலைகளுக்கு மின் கட்டண விலக்களிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

பிரதமர் மோடி கேட்டுக் கொண்டபடி கொரோனா நோய்க்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்காத நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி நாம் நடந்து கொள்ள வேண்டும். வரும் 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை பொதுமக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வராமல் நமக்கு நாமே கட்டுப்பாட்டை உருவாக்கி கொண்டு மக்கள் ஊரடங்கை வெற்றி பெற செய்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News