செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

சிறு குறு தொழில்கள் மூடப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Published On 2020-03-19 08:19 GMT   |   Update On 2020-03-19 08:19 GMT
தமிழகத்தில் சிறுதொழில்கள் எதுவும் மூடப்படவில்லை. சிறுதொழில்கள் எல்லாம் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்தார்.
சென்னை:

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியபோது கொரோனா பாதிப்பால் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி விளக்கினார்.

மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சிறுதொழில்கள் எதுவும் மூடப்படவில்லை. எனவே, அச்சம் தேவையில்லை. சிறுதொழில்கள் எல்லாம் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. அதில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் எல்லாம் பணிபுரிந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அதற்கு முன்னெச்சரிக்கையாக தொழிலாளர் நலத்துறை செயலாளரும் தகுந்த எச்சரிக்கையை கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் எப்படி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். அதேபோல, தொழில் துறை செயலாளர் அவர்களும் மிகப்பெரிய தொழிலில் இருக்கின்ற பணியாளர்களை எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும், எப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார்கள். ஆகவே, எந்தவித அச்சமும் படத்தேவையில்லை. இன்றைக்கு சிறுதொழிலானாலும் சரி, பெரும் தொழிலானாலும் சரி பணியாளர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்

எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், பல நாடுகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இத்தாலி நாட்டில் வெகுவாக பரவியிருக்கிறது. எனவே, இது மேலும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். நம்முடைய மாநிலத்தைப் பொறுத்தவரைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் முழுமூச்சுடன் எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இன்றைக்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மூலமாகத்தான் வருகிறதேயொழிய, நம் மாநிலத்தில் இருப்பவர்கள் மூலமாக வரவில்லை. ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களை பரிசோதனை செய்து, அவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதாவது இருந்தால், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News