செய்திகள்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி அருகே எண்ணை நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-03-18 06:42 GMT   |   Update On 2020-03-18 06:42 GMT
பொன்னேரி அருகே எண்ணை நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி வரை ஐ.ஓ.சி. எல். எண்ணை நிறுவனம் சார்பில் 900 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு குழாய் புதைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், நெய்த வாயில், பஞ்செட்டி கங்காடிக்குப்பம், நாலூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக விவசாயிகளின் அனுமதி இன்றி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எரிவாயு குழாய் புதைக்கப்பட உள்ளது.

இதற்கு அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதனைப் பொருட்படுத்தாமல் எரிவாயு குழாய் அமைப்பதற்கான பணிகள் துரித படுத்தப்பட்டுள்ளது.

ஐ.ஓ.சி.எல். எண்ணை நிறுவனத்தின் இந்த அத்து மீறலை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விளை நிலங்களில் எரிவாயு குழாய் புதைத்தால் மண் வளம் பாதிக்கப்படும். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே மத்திய-மாநில அரசுகள் எரிவாயு குழாய் புதைக்கும் திட்டத்தை மாற்றுப்பாதையில் காட்டுப்பள்ளியில் இருந்து பஞ்சட்டி வழியாக மகாபலிபுரம் வரை அமைக்கப்பட உள்ள 4 வழி சாலை வழியாக செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். தங்களின் கோரிக்கை ஏற்கப்படா விட்டால் எரிவாயு குழாய் புதைக்கும் பணியை தடுத்து நிறுத்துவதோடு சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News