செய்திகள்
கல்லூரி வளாகத்தில் தங்களது உடமைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

புதிய தங்கும் விடுதி கட்டித்தரக்கோரி அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

Published On 2020-03-16 10:58 GMT   |   Update On 2020-03-16 10:58 GMT
புதிய தங்கும் விடுதி கட்டித்தரக்கோரி இன்று அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
நெல்லை:

பாளை முருகன்குறிச்சி பகுதியில் அரசு சித்தமருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு மாணவிகளுக்கு கல்லூரி வளாகத்தில் 2 விடுதிகள் உள்ளன. மாணவர்களுக்கு அரசு சார்பில் வண்ணார்பேட்டையில் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. இந்த விடுதி கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

தற்போது அந்த கட்டிடம் சேதமடைந்து விட்டதால் அங்கு தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பு கருதி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு அரசு சார்பில் மீண்டும் அதே இடத்தில் பழைய விடுதி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய விடுதி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்த நிலையில் 5 ஆண்டுகளாகியும் புதிய விடுதி கட்டிடம் அமைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பலமுறை கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தும் தொடர்ந்து அதற்கான பணிகள் கிடப்பிலேயே போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இன்று காலை சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் புதிய விடுதி கட்டித்தரக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களது உடைமைகள் மற்றும் புத்தக பைகளை கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தடியில் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய விடுதி கட்டிடம் கட்ட உள்ளதால் மாணவர்கள் வெளியில் அறை எடுத்து தங்கி கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை விடுதி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. நாங்கள் வெளியே தங்குவதால் சாப்பாட்டு செலவு, அறை வாடகை உள்ளிட்ட பல்வேறு செலவுகள் எங்களுக்கு ஏற்படுகிறது.

அது மட்டுமல்லாமல் தற்போது முதலாம் ஆண்டு சேர்க்கைக்காக வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விண்ணப்பத்தில் விடுதி வசதி உள்ளது என்று கூறி வினியோகம் செய்கின்றனர். எனவே காலம் தாழ்த்தாமல் புதிய விடுதி கட்டிடம் அமைக்க வேண்டும். அதுவரை எங்களது உள்ளிருப்பு போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே கல்லூரி முதல்வர் விக்டோரியா, துணை முதல்வர் திருத்தணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடனடியாக விடுதி கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று கூறி போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள் தங்களது துணிகளையும் கல்லூரி வளாகத்திலேயே துவைத்து காயப்போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி கல்லூரி வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News