செய்திகள்
ரஜினிகாந்த்

ரஜினி முதல்வர் பதவியை ஏற்காவிட்டால் புரட்சி செய்வோம்- மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆவேசம்

Published On 2020-03-16 07:47 GMT   |   Update On 2020-03-16 07:47 GMT
எதிர் வரும் காலத்தில் கட்சி பெயர் அறிவித்து தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால் ரஜினிகாந்தை முதல்-அமைச்சராக்க புரட்சி செய்வோம் என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை:

நடிகர் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். இதனால் அவர் அரசியல் கட்சி தொடங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அவர் கூறும்போது, ‘நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். முதல்-அமைச்சர் பதவி பற்றி நினைத்து கூட பார்த்ததில்லை.

ஆனால் ஒரு வேளை கட்சி தொடங்கினால் கட்சிக்கு ஒருத்தர் தலைவராக இருப்பார். ஆட்சிக்கு ஒருவர் தலைவராக செயல்படுவார் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அவசர கூட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார்.

ரஜினிகாந்த் கட்சி பெயர் அறிவிக்காதது மிகவும் துரதிருஷ்டமாகும். அதுமட்டுமல்லாமல் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று கூறியது வேதனை அளிக்கிறது.

கட்சி தலைமை வேறு, ஆட்சி தலைமை வேறு ஆக இருக்கும் என்று சொன்னது குழப்பமாக உள்ளது. எதிர் வரும் காலத்தில் கட்சி பெயர் அறிவித்து தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால் ரஜினிகாந்தை முதல்-அமைச்சராக்க புரட்சி செய்வோம்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
Tags:    

Similar News