செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- முதல்வர்

Published On 2020-03-13 06:50 GMT   |   Update On 2020-03-13 07:50 GMT
என்பிஆர் விஷயத்தில் சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் ஒரு பிரச்சனையை கிளப்பினார்.

அப்போது அவர் பேசும்போது, சட்டமன்ற மரபின்படி சட்டசபை நடந்து கொண்டிருக்கும்போது புதிய திட்டங்களையோ, புதிய அறிவிப்புகளையோ சட்டசபைக்கு வெளியே சொல்ல கூடாது.

ஆனால் வருவாய் துறை அமைச்சர் நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கான கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அதில் உள்ள மூன்று அம்சங்கள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு உள்ளோம். இன்னும் விளக்கம் வராததால் அதை நிறுத்தி வைத்துள்ளோம் என்று சபையில் சொல்லாததை வெளியில் சொல்லி இருக்கிறார்.

எனவே அமைச்சர் சொன்ன அதே கருத்தை சபையில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும். வந்தால் நாங்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறோம். அதை செய்ய தயக்கம் ஏன்?

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அபுபக்கர் (முஸ்லிம் லீக்), ராமசாமி (காங்), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகியோரும் இந்த கருத்தை வலியுறுத்துவதாக தெரிவித்தனர்.

இதற்கு அமைச்சர் உதயகுமார் அளித்த பதில் வருமாறு:-

சபை விதிகள் அனைத்தும் அனைவருக்கும் தெரியும். கடந்த 11-ந்தேதி என்.பி.ஆர். கணக்கெடுப்பு குறித்து நான் சபையில் சொன்னதுதான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியின்போது தெரிவித்தேன்.

அதில் இடம்பெற்று உள்ள மூன்று கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு இருக்கிறோம். இன்னும் அதற்கு பதில் வரவில்லை என்று அவையில் பேசியதைதான் வெளியில் சொன்னேன்.

மு.க.ஸ்டாலின்:- மத்திய அரசு ஏப்ரல் 1-ந்தேதி இந்த கணக்கெடுப்பு தொடங்கும் என்று அறிவித்து இருக்கிறது. நீங்கள் விளக்கம் கேட்டுள்ளதாக சொல்லி இருக்கிறீர்கள். அதையே ஒரு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

அமைச்சர் உதயகுமார்:- மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது சரியல்ல. இதை சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி நீங்கள் சொல்ல வேண்டும். (அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டனர். அவர்களை சபாநாயகர் கண்டித்தார்)

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:- அமைச்சர் பதில் சொல்லும் போது உறுப்பினர்கள் அமைதியுடன் இருக்க வேண்டும். அவர் சொல்லும் பதிலை பொறுமையாக கேட்க வேண்டும்.


அமைச்சர் உதயகுமார்:- தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்த போதுதான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எந்த பிரச்சனையும் இல்லை. இப்போது எந்த பிரச்சனையும் கிடையாது. எதிர்க்கட்சி தலைவர் ஆவணம் கேட்டதாக கூறி இருக்கிறார். அவர் தவறாக அப்படி கூறியதால் சிறுபான்மையினர் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அமைதி கெடும் நிலை உருவாகுகிறது. இதை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது.

மு.க.ஸ்டாலின்:- எந்தவித ஆவணமும் தேவையில்லை என்று அமைச்சர் கூறுகிறார். அப்படியென்றால் நீங்கள் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் என்ன?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- சிறுபான்மையினர் அமைதியாக இருக்க வேண்டும். அதற்காகதான் அமைச்சர் வெளியே பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளித்து இருக்கிறார். இந்த கணக்கெடுப்பால் எந்த பாதிப்பும் வராது என்று பலமுறை சொல்லி விட்டோம்.

ஆனால் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வெளியே ஒரு கூட்டத்தில் பேசும்போது பதட்டம் ஏற்படும் வகையில் பேசி இருக்கிறார்.

அனைவரும் அமைதியாக இருக்க நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதை விடுத்து மக்களை தூண்டி விடக்கூடாது. சபையில் சொன்னதை தான் வெளியில் அமைச்சர் கூறி இருக்கிறார். இதில் எந்த உரிமை மீறலும் இல்லை.

2003-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் சில அம்சங்களை சேர்க்கலாம். சில அம்சங்களை நீக்கலாம். தற்போது சேர்ந்துள்ள மூன்று அம்சங்களை பற்றிய விளக்கம் கேட்டு இருக்கிறோம். இதை தான் அமைச்சர் வெளியில் கூறி இருக்கிறார்.

துரைமுருகன்:- வெளியில் சொல்வதை சபையில் தீர்மானமாக கொண்டு வரலாமே?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- அமைச்சர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டார் அதை பற்றி மீண்டும் மீண்டும் பேசக்கூடாது. நீங்கள் உள்ளே ஒன்று பேசுகிறீர்கள். வெளியில் வேறொன்று பேசிகிறீர்கள். அமைதியான இந்த மாநிலத்தை பதட்டமான நிலைக்கு கொண்டு வரும் வகையில் பேசுவதை ஏற்க முடியாது.

சபாநாயகர் தனபால்:- எதிர்க்கட்சி துணை தலைவர், அமைச்சர் வெளியே கூறியது அவை மீறல் என்று கூறி உள்ளார். அதை ஏற்க முடியாது. சபையில் என்ன சொன்னாரோ அதை தான் வெளியில் சொல்லி இருக்கிறார். எனவே இது அவை மீறல் இல்லை. எனவே இந்த விவாதத்தை இத்துடன் முடித்து கொள்ளலாம் என்றார்.
Tags:    

Similar News