செய்திகள்
விபத்து

உடுமலை அருகே வேன் மோதி பள்ளி மாணவன் பலி

Published On 2020-03-12 10:30 GMT   |   Update On 2020-03-12 10:30 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வேன் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த வல்லக்குண்டாபுரம் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ்(40). கூலித்தொழிலாளி. இவருக்கு மாரியம்மாள்(35) என்ற மனைவியும், பரணிதரன் (9) என்ற மகனும் பிரனிதா (4) என்ற மகளும் உள்ளனர்.

பரணிதரன் எரிசனம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பரணிதரன் அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக அந்த பகுதியில் செல்லும் தளி- ஆனைமலை சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக பரணிதரன் மீது மோதியது. இதில் மாணவன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன் பரணிதரனின் உறவினர்கள் அந்த வேனை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News