செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்- எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Published On 2020-03-12 08:26 GMT   |   Update On 2020-03-12 08:26 GMT
தமிழகத்தில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதால் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதன் மீது பரமசிவம் (அ.தி.மு.க.), சரவணன் (தி.மு.க.), ஆர்.ராமசாமி காங்கிரஸ்), அபுபக்கர் (முஸ்லிம் லீக்) ஆகியோர் பேசினார்கள்.

அவர்கள் பேசுகையில், “கொரோனா வைரசை விட வதந்திகள் வேகமாக பரவுகிறது. அமைச்சர்கள் கூட கை கொடுக்க மறுக்கிறார்கள்.

எனவே தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தாலும் விழிப்புணர்வை மேலும் அதிகப்படுத்த வேண்டும். மக்கள் தற்காப்புக்காக முக கவசம், கிருமி நாசினி (சானிடைசர்) தற்போது எங்கும் கிடைப்பதில்லை என்று ஆலோசனைகளை தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில், வதந்திகளை நம்ப வேண்டாம். நமது சுகாதார பணியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே யாரும் பதட்டம் அடைய வேண்டாம்.

நம்மிடம் 10 லட்சம் மாஸ்க் உள்ளது. தேவையான தடுப்பு மருந்துகளும் உள்ளன. கொரோனா பாதித்த காஞ்சிபுரம் என்ஜினீயருக்கு தேவையான மருந்துகளை கொடுத்து குணப்படுத்தி உள்ளோம். முதலில் பாசிட்டிவ் என ரிப்போர்ட் வந்தது.

நமது டாக்டர்கள் சிகிச்சைக்கு பிறகு இரண்டு டெஸ்ட் எடுக்கப்பட்டதில் நெகட்டிவ் ரிப்போர்ட் வந்துள்ளது. அவர் வேகமாக குணமடைந்து வருவதால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய தயாராக உள்ளோம். எனவே தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவவில்லை.

இதுவரை 1 லட்சத்து 46 ஆயிரம் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் 1465 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து நாடுகளில் இருந்து வருபவர்களையும் மருந்துவ பரிசோதனை செய்த பிறகே வெளியே அனுப்புகிறோம்.

எனவே 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீடுகளுக்கு செல்லும் போது சாதாரண சோப் போட்டு கை, கால், முகத்தை கழுவினாலே போதும் என வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

பாதிப்படைந்த நாடுகள், மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.



அப்போது துரைமுருகன் தி.மு.க. பேசும்போது, மக்கள் பயப்பட வேண்டாம். தமிழ்நாட்டில் ஒன்றும் இல்லை என்று பேசுகிறீர்கள். ஆனால் போன் செய்தாலே கொரோனா பற்றி விளம்பரம் வருகிறது. சட்டசபைக்கு வந்தால் வாசலில் சுகாதார பெண் பணியாளர்களை நிறுத்தி கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்ய சொல்கிறீர்கள்.

சட்டசபையில் உள்ளவர்களுக்கு யாருக்கும் பாதிப்பு இல்லை. இங்கு யாருக்கும் மாஸ்க் இல்லை. எந்த முன் எச்சரிக்கையும் இங்கு இல்லை. கொரோனா பீதியால் போப் ஆண்டவரே பிரார்த்தனை நடத்தும் கூட்டம் இல்லை.

ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனாவால் இறக்கிறார்கள். எனவே ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை என்று எங்களை காலி செய்ய பார்க்கிறீர்களா? ஏதாவது ஒன்று நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது? பயத்தால் நாங்கள் கை குட்டையை வாயில் பொத்திக் கொள்கிறோம். இருமுவதற்கே பயமாக உள்ளது. எல்லோருக்கும் மாஸ்க் கொடுங்கள்.

இவ்வாறு துரைமுருகன் நகைச்சுவையாக பேசியதால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிரித்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இது போன்ற பயம் எல்லாம் இருக்கக்கூடாது என்பதற்காக அமைச்சர் சிறப்பாக பேசி உள்ளார். எனவே நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேகமாக பரவும் என்பதால்தான் நீங்கள் (துரைமுருகன்) அச்சப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர். எனவே நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு வயது அதிகமானாலும் அச்சப்பட தேவையில்லை.

தமிழகத்தில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதால் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

துரைமுருகன் பேசுகையில், “சட்டசபையில் இருந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்குங்கள். கிருமி நாசினியை தெளியுங்கள்” என்றார்.

Tags:    

Similar News