செய்திகள்
மு.க.ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்?: மு.க.ஸ்டாலின்

Published On 2020-03-12 01:49 GMT   |   Update On 2020-03-12 01:49 GMT
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை :

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்.பி.ஆர். கணக்கெடுப்பை நடத்தக் கூடாது, அதை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஏற்கனவே பல நாட்களாக வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதியில் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். நேரமில்லா நேரத்தில் நான் இந்தப் பிரச்சினையை எழுப்பி உடனடியாக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சொன்னேன்.

இதற்குப் பதில் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், இந்தச் சட்டத்தால் எந்த மக்களுக்கும் பாதிப்பில்லை. குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மக்களுக்கு பாதிப்பில்லை என்று தொடர்ந்து தவறான தகவலை அவையில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்தச் சட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் இருக்கிறது என்று நான் அவையில் எடுத்து சொன்னேன்.

ஏற்கனவே 13 மாநிலங்களில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் இதைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்தச் சட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இதுகுறித்து பேசமுடியாது என அமைச்சர் சில விளக்கங்களைத் தந்தார். கேரள சட்டசபையில் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி நீதிமன்றத்திற்கு சென்று வழக்கும் போட்டுள்ளனர்.

வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதியில் இரவு பகல் பாராமல் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அந்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போட வேண்டும் என்று எடுத்துச் சொன்னோம். அதற்கு அவர்கள் செவி மடுக்கவில்லை. அதனால் அதைக் கண்டித்து தி.மு.க. சார்பில் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள், ‘மக்களுடைய அச்சத்தை போக்குவதற்காகத் தான் நாங்கள் விளக்கம் கேட்டிருக்கிறோம். அதில் என்ன தவறு இருக்கிறது என்று அமைச்சர் கேட்டு இருக்கிறாரே?’ என்று கேட்டனர். இதற்கு அவர், ‘மக்களுடைய அச்சத்தை போக்குவதற்காக அல்ல; அவர்கள் (ஆட்சியாளர்கள்) அச்சத்துடன் இருக்கிறார்கள். இந்தச் சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் போட்டால் அவர்களது ஆட்சி போய்விடும் என்று பயப்படுகிறார்கள். ஆட்சி போவது மட்டுமல்ல; இவர்கள் மீதான ஊழல், லஞ்சப் புகார்கள், சி.பி.ஐ. விசாரணை போன்ற அத்தனை விவகாரமும் மத்திய அரசின் வசம் உள்ளது. அவர்கள் சிறையில் இருக்க வேண்டும். அந்தப் பயத்தால் தான் இந்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போட பயப்படுகிறார்கள்’ என்றார்.

Tags:    

Similar News