செய்திகள்
அரிவாள் வெட்டு

மாதவரத்தில் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் பயங்கர மோதல்- ஒருவருக்கு வெட்டு

Published On 2020-03-11 09:13 GMT   |   Update On 2020-03-11 09:13 GMT
சென்னை மாதவரத்தில் உள்ள ஆந்திரா பஸ் நிலையம் அருகில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் திடீரென மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதவரம்:

சென்னையில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், மாநில கல்லூரி மாணவர்களும் பஸ் வழித்தட பிரச்சினையில் ஆயுதங்களுடன் இதற்கு முன்னர் பல முறை நடுரோட்டில் சண்டைப் போட்டு உள்ளனர்.

மெரினாகடற்கரையிலும், பச்சையப்பன் கல்லூரி எதிரிலும் நடந்த மோதல் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்குமுன்பு நுங்கம் பாக்கம் பகுதியிலும் நடு ரோட்டில் மாணவர்கள் பட்டாக்கத்திகளுடன் மோதி கொண்டனர்.

இந்த நிலையில் இன்று காலை சென்னை மாதவரத்தில் உள்ள ஆந்திரா பஸ் நிலையம் அருகில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் திடீரென மோதலில் ஈடுபட்டனர்.

ஆந்திரா பஸ் நிலையம் இருக்கும் பகுதி எப்பொழுதும் பரப்பரப்பாக காணப்படும். லாரி உள்ளிட்ட வாகனங்களும் அதிக அளவில் நிறுத்தப்பட்டு இருக்கும்.

இது போன்ற இடத்தில் மாணவர்கள் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டது அங்கு இருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர்கள் ஒருவரை ஒருவர் கத்தி- வாள், வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களால் விரட்டி விரட்டி வெட்டினர்.

இதை பார்த்து பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். கைகளில் ஆயுதங்கள் வைத்து இருந்ததால் மாணவர்களின் மோதலை தடுக்க யாரும் முன் வரவில்லை.

இந்த மோதலில் மாணவர் ஒரு வருக்கு சரமாரியாக வெட்டு விழுந்தது. காயம் அடைந்தம் அவரை அங்கு இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.

இது பற்றி தகவல் கிடைத்தும் மாதவரம் போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் சில மாணவர்கள் தப்பி ஓடினர்.

இருப்பினும் 12 மாணவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அனைவரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். மோதலுக்கு பயன்படுத்திய 3 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மாணவர்கள் மோதலை தடுக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News