செய்திகள்
நகை பறிப்பு

செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண்

Published On 2020-03-10 12:07 GMT   |   Update On 2020-03-10 12:07 GMT
செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் போல் நடித்து மூதாட்டிக்கு மயக்க மாத்திரை சாப்பிட சொல்லி 6 பவுன் நகையை பறித்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

செங்கம்:

செங்கம் அருகே உள்ள புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி சின்ன குழந்தை (வயது 65) சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக மாதம் தோறும் செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாத்திரை வாங்கி வருவது வழக்கம்.

நேற்று சின்ன குழந்தை மாத்திரை வாங்குவதற்காக செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். மாத்திரை வாங்கி விட்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் அருகே அமர்ந்திருந்தார்.

அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் டாக்டர் போல் வந்தார். அவர் சின்ன குழந்தையிடம் நான் உங்கள் தூரத்து உறவினர் என்னைத் தெரியவில்லையா எனக்கூறி பேச்சுக் கொடுத்தார். சின்ன குழந்தை தெரியவில்லை என்று கூறியும் அந்த பெண் நான் உங்கள் உறவினர் தான் உங்களுக்கு மறந்துவிட்டது.

இப்போது எப்படி இருக்கிறீர்கள் தனியாக நீங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்ததை பார்த்தாலே கஷ்டமாக இருக்கிறது. உங்களுக்கு நான் முதியோர் உதவித்தொகை வாங்கித் தர ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியுள்ளார். அவரது ஆறுதல் வார்த்தைகளை நம்பிய சின்ன குழந்தை மனம் விட்டு பேச ஆரம்பித்தார். அப்போது மாத்திரையை உடனடியாக சாப்பிடும்படி அந்த பெண் சின்ன குழந்தையிடம் கூறினார்.

அவர் ஆஸ்பத்திரியில் வாங்கிய மாத்திரைகளை கையில் எடுத்தார்.அப்போது ஒரு மயக்க மாத்திரையையும் சின்ன குழந்தைக்கு தெரியாமல் அந்த பெண் கொடுத்தார். மாத்திரையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சின்ன குழந்தை மயக்கம் வருவதாக கூறினார்.

அந்த பெண் தனது மடியிலேயே படுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியதும் சின்ன குழந்தை அந்தப் பெண்ணின் மடியில் படுத்தார். சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் அந்த பெண் சின்ன குழந்தை அணிந்திருந்த 6 ž பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். மயக்க நிலையில் இருந்த சின்னக்குழந்தை மரத்தடியிலேயே படுத்திருந்தார். இரவு 7 மணி வரை அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு வந்து தேடினர்.

அப்போது மரத்தடியில் சின்ன குழந்தை மயக்க நிலையில் கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். அவருக்கு தண்ணீர் கொடுத்த பிறகு மயக்கம் தெளிந்தது. பின்னர் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு சென்ற பிறகுதான் அவர் அணிந்திருந்த நகை மாயமானது தெரியவந்தது.

இதுதொடர்பாக செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மூதாட்டியிடம் விசாரணை நடத்தினார்.

மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். டாக்டர் போல் நடித்து மூதாட்டியிடம் பணம் பறித்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் செங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News