செய்திகள்
டாக்டர் ஜெயந்தி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி?: அரசு மருத்துவமனை ‘டீன்’ ஜெயந்தி விளக்கம்

Published On 2020-03-07 02:09 GMT   |   Update On 2020-03-07 02:09 GMT
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை :

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கொரோனா வைரஸ் என்பது என்ன?

பதில்:- கொரோனா வைரஸ் என்பது விலங்குகளிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் ஒரு நோய். இந்த நோய் படிப்படியாக தற்போது விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் கிருமி வட்ட வடிவில் உள்ளது. இதன்மேல் கிரீடம் இருப்பது போன்ற தோற்றம் கொண்டது. இதனால் தான் இதற்கு கொரோனா என்று பெயர் வைக்கப்பட்டது.

இதுவரை 7 வகையான கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ‘சார்ஸ்’ வகை கொரோனா பூனையில் இருந்தும், ‘மெர்ஸ்’ வகை கொரோனா ஒட்டகத்தில் இருந்தும் மனிதனுக்கு பரவியது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட நாவல் கொரோனா வைரஸ் எந்த மிருகத்தில் இருந்து பரவியது என உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் இல்லை.



கேள்வி:- கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது? அதன் அறிகுறிகள் என்ன?

பதில்:- கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவுடன் சளி மற்றும் இருமல் தான் இருக்கும். இந்த நோயின் தாக்கம் வெளிப்படுவதற்கு 2 வாரங்கள் ஆகும் என உலக சுகாதாரத்துறை நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது அவர்களது வாயில் இருந்து வெளிவரும் நீர் துளிகள் பிறர் மீது படும்போதும் அல்லது அந்த நீர் துளிகள் உள்ள இடங்களில் கை வைத்து அதை முகத்தின் அருகே கொண்டு வரும்போதும் கொரோனா வைரஸ் பரவுகிறது.

கேள்வி:- இதுவரை உலகில் கண்டறியப்பட்ட கொடிய நோய்களின் பாதிப்புகள் கொரோனாவை விட அதிகமானவையா?

பதில்:- கொரோனா, எபோலா போன்ற வைரஸ் கிருமியின் தாக்குதல் அதிக அளவில் பரவி இருக்கிறது. இதைப்போல் எபோலா பாதித்தவர்களில் 80 சதவீதம் பேர் வரை இறந்துள்ளனர். ஆனால் தற்போது உள்ள நாவல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இறக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதம் பேர் மட்டுமே இறந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடியது தான். ஆனால் குழந்தைகளை பாதித்ததாக இதுவரை யாரும் கூறவில்லை. இந்த வைரசால் உயிர் இழந்தவர்களில் அதிகம் பேர் முதியவர்கள் தான் என உலக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேள்வி:- கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த செய்ய வேண்டியவை என்ன?

பதில்:- கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது அவர்களது வாயில் இருந்து வெளிவரும் நீர் துளிகளால் தான் அதிக அளவில் பரவுகிறது. இதனால் கைகளை ‘சோப்’ மற்றும் சானிடைசர் என்ற சுத்திகரிப்பு திரவம் கொண்டு தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுமான வரையில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது நல்லது. தும்மும் போதும், இருமல் வரும் போதும் துணி வைத்து வாயை மூடிக்கொண்டால் இந்த நோய் பரவுவதை குறைக்கலாம். சுகாதாரமாக இருப்பதால் இந்த நோய் பாதிப்பு முற்றிலும் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News