செய்திகள்
ஹெல்மெட் அணியாமல் சென்ற 68¾ லட்சம் பேர் மீது வழக்கு

ஹெல்மெட் அணியாமல் சென்ற 68¾ லட்சம் பேர் மீது வழக்கு

Published On 2020-03-04 02:16 GMT   |   Update On 2020-03-04 02:16 GMT
ஹெல்மெட் அணியாமல் சென்ற 68¾ லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை :

மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணியவேண்டும். கார் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ‘சீட் பெல்ட்’ அணியவேண்டும் என்ற மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளை தீவிரமாக அமல் படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரே‌‌ஷ், கிரு‌‌ஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத் துத்துறை முதன்மை செயலாளர் ஜவஹர், தமிழக போலீஸ் சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி. சாம்சன் ஆகியோர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தமிழகம் முழுவதும் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் முதல் கடந்த ஆண்டு நவம்பர் வரை ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்றதாக 68 லட்சத்து 76 ஆயிரத்து 452 பேர் மீதும், ‘சீட் பெல்ட்’ அணியாமல் சென்றதாக 15 லட்சத்து 90 ஆயிரத்து 382 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.



அதேபோல மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 2 லட்சத்து 7 ஆயிரத்து 291 பேர் மீதும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக 4 லட்சத்து 63 ஆயிரத்து 543 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் முழுமையாக பின்பற்றப்பட்டு வருவதால் கடந்த 2016-ம் ஆண்டை ஒப்பிடுகையில் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணம் 38 சதவீதமாக குறைந்துள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

Similar News