செய்திகள்
பாஜக

புதுவை டிஜிபி அலுவலகத்தில் பா.ஜனதா திடீர் மறியல்

Published On 2020-03-03 12:35 GMT   |   Update On 2020-03-03 12:35 GMT
புதுவை டி.ஜி.பி. அலுவலகத்தில் பாஜகவினர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி:

மத்திய மந்திரி நிதின் கட்காரி கடந்த வாரம் புதுவை வந்திருந்தார். அவர் அரவிந்தர் ஆசிரமத்திற்கு தரிசனம் செய்வதற்காக சென்றார். அவருடன் மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ.வும் சென்றார். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு சுபம்சந்திரகோஷ் சாமிநாதன் எம்.எல்.ஏ.வை தடுத்தார். மேலும் அவர் சட்டையை பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதன்மூலம் போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் எம்.எல்.ஏ.வை அவமதித்து விட்டதாக பாரதீய ஜனதாவினர் குற்றம் சாட்டினர்.

இதுபற்றி இன்று மாநில டி.ஜி.பி.யிடம் புகார் அளிப்பதற்காக பாரதீய ஜனதா நிர்வாகிகள் வந்தனர். துணைத்தலைவர் முதலியார்பேட்டை செல்வம், பொதுச்செயலாளர் தங்க. விக்ரமன், மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு, வக்கீல் கார்த்திகேயன், ராஜ்பவன் தொகுதி தலைவர் கணபதி, புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தார்கள்.

ஆனால் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா அவர்களை உடனடியாக சந்திக்காமல் காத்திருக்கும் படி கூறிவிட்டார். டி.ஜி.பி. அலுவலகத்தை இன்று சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்தது. அவர்களுடன் டி.ஜி.பி. கலந்துரையாடியதால் பாரதீய ஜனதா நிர்வாகிகளை உடனடியாக சந்திக்க முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறிது நேரம் காத்திருக்கும் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் கூறினார். இதை அவமதிப்பாக பாரதீய ஜனதா நிர்வாகிகள் கருதினார்கள்.

அவர்கள் ஏற்கனவே முன்அனுமதி வாங்கிவிட்டு தான் வந்திருந்தனர். உரிய நேரத்திற்கு அனுமதி தராததால் கோபம் அடைந்த அவர்கள் டி.ஜி.பி. அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சூப்பிரண்டு மோகன்குமார், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆகியோர் பாரதீய ஜனதா நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் நேரம் வாங்கி தருவதாக உறுதி அளித்தனர்.

இதனால் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News