செய்திகள்
காங்கிரஸ்

சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காங்கிரசார் போலீசில் புகார்

Published On 2020-03-03 09:14 GMT   |   Update On 2020-03-03 09:14 GMT
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரசார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ராயபுரம்:

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை முருகன் என்பவர், ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அவரை அவமதிக்கும் விதத்தில் பேசி ‘டிக்டாக்’ எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டார். இது காங்கிரசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் இந்த செயலை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் இன்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர். தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, ராஜீவ்காந்தியை அவமதிக்கும்படி தூண்டிவிட்ட நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ் நினைவிடத்தில் அவரை அவமதிக்கும் டிக்டாக் எடுத்து வெளியிட்ட சாட்டை முருகனை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். சுமார் 1 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏராளமான காங்கிரசார் இதில் பங்கேற்றனர்.

பின்னர் காங்கிரசார் எம்.எஸ்.திரவியம் தலைமையில் வண்ணாரப்பேட்டை போலீஸ் டி.எஸ்.பி.சுப்புலட்சுமியை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

அதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூண்டுதலின் பேரில் அந்த கட்சியைச் சேர்ந்த சாட்டை முருகன் என்பவர் ராஜீவ்காந்தி சமாதிக்கு சென்று அவரை அவமதிக்கும் வகையில் வசனம் பேசி டிக்டாக் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் பற்றி தவறான கருத்தை கூறி டிக்டாக் வெளியிட்ட சாட்டை முருகனை கைது செய்ய வேண்டும். அதற்கு தூண்டுதலாக இருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
Tags:    

Similar News