செய்திகள்
டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 35 பேருக்கு சம்மன்- நேரில் அழைத்து விசாரிக்க முடிவு

Published On 2020-03-03 06:05 GMT   |   Update On 2020-03-03 06:11 GMT
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் சிக்கியுள்ள அதிகாரிகளையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசர் முடிவு செய்துள்ளனர்.

சென்னை:

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்து பலர் அரசு வேலைக்கு தேர்வு ஆனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் 39 பேர் தவறான வழியில் தேர்வு ஆனது தெரியவந்தது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். இந்த முறைகேடு செய்வதற்கு உறுதுணையாக இருந்த பலர் கைது செய்யபட்டுள்ளனர்.

இதுபோல் 2017-ம் ஆண்டு குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு செய்து தலைமை செயலகம், வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் அரசு பணிகளில் 42 பேர் சேர்ந்தது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்தது.

இதற்காக லட்சக்கணக்கான ரூபாய் கைமாறி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடாக பணியில் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு முறைகேடுகளுக்கும் இடைத்தரகர்களாகவும், உறுதுணையாகவும் இருந்த அதிகாரிகள், போலீஸ்காரர்கள், அரசு பணியில் இருந்தவர்கள் உள்பட 40-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான இடைத்தரகர்கள் ஓம்காந்தன், ஜெயக்குமார் ஆகியோர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாள்களை வாகனத்தில் வரும் போதே மாற்றியது, அழியும் மை பேனாவை கொடுத்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடந்தைக்கு காரணமாக இருந்த டிரைவர்களும் சிக்கினார்கள்.

இது தவிர கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்விலும் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. அதிலும் ஓம்காந்தன், ஜெயக்குமார் ஆகியோருககு தொடர்பு இருந்ததை சி.பி.ஐ. போலீசார் கண்டுபிடித்தனர். கைதாகி சிறையில் இருக்கும் ஓம்காந்தன், ஜெயக்குமார் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு வழக்கிலும், கைதான ஓம்காந்தன், ஜெயக்குமார் இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதிகேட்டு மனுதாக்கல் செய்தனர். சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தபபட்ட 2 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ் திரேட்டு ராஜ்குமார் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மோசடியில் ஓம்காந்தன், ஜெயக்குமார் போன்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. 35 பேர் வரை இந்த மோசடியில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.

முறைகேட்டில் சிக்கியுள்ள அதிகாரிகளையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி. சி.ஐ.டி. போலீசர் முடிவு செய்துள்ளனர். எனவே 35 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட உள்ளது. படிப்படியாக அவர்களிடம் இந்த விசாரணை நடைபெறும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News