செய்திகள்
திருவள்ளுவர் சிலையை துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தியபோது எடுத்தபடம்

தமிழ் கவிதைகளுக்கு உலக அளவில் ஈர்ப்பு: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

Published On 2020-02-29 02:04 GMT   |   Update On 2020-02-29 02:04 GMT
தமிழ் கவிதைகளுக்கு உலக அளவில் ஈர்ப்பு உள்ளது. திருக்குறள் நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
சென்னை :

மாமல்லபுரத்தில் தமிழக அரசின் கலை, பண்பாட்டுத்துறையின் சார்பில் இயங்கும் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவுக்கு அமைச்சர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.

விழாவில் மாணவ-மாணவிகள் மத்தியில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

மாமல்லபுரம் என்ற பெயரே நம் மனங்களில் மரியாதை மற்றும் பயபக்தியை உண்டாக்குகிறது. இயற்கையும் கலாசாரமும் ஒன்றாக சங்கமித்து உள்ள இடமாக மாமல்லபுரம் உள்ளது. இரண்டையும் மதித்து, பாதுகாப்பதன் மூலம், அதன் வளமைக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

உலகில் உயிர்ப்புடன் உள்ள நாகரிகங்களில் மிகவும் பழமையானவற்றில் ஒன்றாக நமது நாகரிகம் உள்ளது. பரதநாட்டியத்தின் பிறப்பிடமாகவும், சாஸ்திரிய சங்கீத பாரம்பரியம் மிகுந்த இடமாகவும், இந்தியாவின் பல வகையான கலாசாரங்களின் வளமைகளை கொண்டதாகவும் தமிழகம் உள்ளது.



இந்தியாவில் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மொழியாக தமிழ் உள்ளது. அதன் வளமையான இலக்கியங்கள் உத்வேகம் தருபவையாக உள்ளன. அதன் கவிதைகளுக்கு உலக அளவில் ஈர்ப்பு உள்ளது.காலங்களை கடந்த ஞானமாக உள்ள திருக்குறள் இப்போதும் நமக்கு வழிகாட்டியாக உள்ளது. வாழ்க்கை என்பது உடலுடன் தொடர்பு கொண்டதாக உள்ளபோது, அன்பு என்பது வாழ்வுடன் ஒருங்கிணைந்ததாக உள்ளது என்று கூறும்போது, பகிர்தல் மற்றும் அக்கறை காட்டுதலையும், வசுதெய்வ குடும்பகம் என்பதையும் திருக்குறள் நமக்கு கற்பிக்கிறது.

தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் போன்ற பெரிய கோவில்கள், நம்முடைய கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையின் மேன்மையான திறமைகளைப் பறைசாற்றும் சாட்சிகளாக உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு இக்கல்லூரி முகப்பில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையினை திறந்துவைத்தார். பின்னர் மாணவர்கள் வடித்த சிற்பங்களை ஒவ்வென்றாக சென்று பார்வையிட்டு, பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சமஸ்கிருத கலாசார மையத்தை தொடங்கி வைக்கிறார் என்று வெளியான செய்தி சரியானதல்ல. அவ்வாறு எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை.
Tags:    

Similar News