செய்திகள்
கைது

கன்னியாகுமரி அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

Published On 2020-02-28 17:29 GMT   |   Update On 2020-02-28 17:29 GMT
கன்னியாகுமரி அருகே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி வரும் அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கன்னியா குமரி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் நேற்று அரசு பஸ்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். லீபுரம் சந்திப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. அதில் இருந்த வாலிபர் ஒருவர் கையில் பையுடன் பஸ்சில் இருந்து இறங்கினார். 

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற் கொண்டனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த தனுஷ் கோடி (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திவந்த தனுஷ்கோடியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் கஞ்சா யாரிடம் வாங்கினார் எனவும், யார், யாரிடம் விற்பனை செய்வதற்காக கொண்டுவந்தார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News