செய்திகள்
திருமாவளவன் எம்.பி.

உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும்- திருமாவளவன் எம்.பி. பேச்சு

Published On 2020-02-28 12:49 GMT   |   Update On 2020-02-28 12:49 GMT
டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. பேசியுள்ளார்.
நாகர்கோவில்:

திட்டுவிளையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்துக்கு சமீர் தலைமை தாங்கினார். முகமது ராபி வரவேற்றார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., திட்டுவிளை ஜும்மா பள்ளி நிர்வாக தலைவர் மைதின் பிள்ளை, குமரி மாவட்ட ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் எம்.ஏ.கான், தலைவர் அப்துல் லத்தீப், மதபோதகர்கள் ராஜ்குமார், மரியதாஸ், பன்னீர்செல்வம் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, எஸ்.டி.பி.ஐ. மாநில பேச்சாளர் முகமது ஹூசைன், சுந்தரவள்ளி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்பது தான் சங்க் பரிவார்களின் எண்ணம். அதன்படி தான் மத்திய அரசின் ஆட்சியும் நடந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்கள் மட்டும் அல்ல, அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இது தெரியாமல் சிலர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். டெல்லி வன்முறைக்கு பா.ஜனதாவும், சங்க் பரிவாரும் தான் காரணம். குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேறியதற்கு தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள் தான் காரணம். அவர்கள் எதிராக வாக்களித்திருந்தால், குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறி இருக்காது.

இவ்வாறு அவர் பேசினார். 

இந்த முடிவில் முகமது சர்ஜுன் நன்றி கூறினார்.

முன்னதாக திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் டெல்லியில் நடந்த வன்முறை பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. டெல்லி வன்முறை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


வன்முறை சம்பவத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும். டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக நீதி விசாரணை கேட்டு, நாளை (29-ந் தேதி)சென்னையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

டெல்லி காவல்துறை யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. வன்முறையில் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில் காவல்துறை வழக்குபதிவு செய்யவில்லை என்பதன் மூலம் அரசியல் தலையீடு இருப்பது உறுதியாகி உள்ளது என்றார்.
Tags:    

Similar News