செய்திகள்
கைது

கோவையில் போலீஸ் போல் நடித்து செல்போன்கள் பறித்த 3 பேர் கைது

Published On 2020-02-28 11:52 GMT   |   Update On 2020-02-28 11:52 GMT
கோவையில் தங்கும் விடுதியில் போலீஸ் போல் நடித்து செல்போன்கள் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை:

கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னவேடம் பட்டியில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை, கல்லூரி செல்லும் பெண்கள் உள்பட ஏராளமானோர் பலர் தங்கி உள்ளனர். கடந்த 12-ந் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த விடுதிக்கு காரில் 4 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் போலீஸ் உடையுடனும், மற்றவர்கள் சாதாரண உடையிலும் இருந்தனர். விடுதியில் இருந்தவர்கள் நீங்கள் யார் என்று கேட்டனர்.

அதற்கு நாங்கள் கஞ்சா தடுப்பு பிரிவு சிறப்பு போலீசார் என்றும், உங்கள் விடுதியில் சோதனை நடத்த வந்ததாகவும் கூறினர். இதை உண்மை என நம்பிய விடுதியில் இருந்தவர்களும் அவர்களை சோதனை செய்ய அனுமதித்தனர். அப்போது 4 பேர் கும்பல் அங்கிருந்த 3 பேரிடம் செல்போனை பறித்தனர். பின்னர் உங்கள் மீது சந்தேகம் உள்ளது. எனவே உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். அதற்காக நீங்கள் போலீஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறி விட்டு தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிவிட்டனர்.

இதையடுத்து விடுதியில் இருந்தவர்கள் அருகில் இருந்த போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது தான் விடுதிக்கு வந்து சோதனை நடத்தியது போலி போலீசார் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து விடுதியில் உள்ளவர்கள் சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசார் என்று கூறி விடுதிக்கு சென்று செல்போனை பறித்து சென்றது காரமடையை சேர்ந்த லேப்-ஆபரேட்டர் சுரேஷ் குமார்(29), சின்னவேடம்பட்டியை சேர்ந்த சுகுமாறன், துடியலூரை சேர்ந்த கண்ணன், வினோத் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷ்குமார், சுகுமாறன், கண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் வேடம் அணிந்த வினோத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News