செய்திகள்
கொசு

கொசு தொல்லையால் புதுவை மக்கள் அவதி

Published On 2020-02-28 09:41 GMT   |   Update On 2020-02-28 09:41 GMT
புதுவையில் கொசுக்களின் தொல்லையை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் பனிக்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கி உள்ளது.

வழக்கமாக வெயில் அதிகரிக்கும்போது கொசு தொல்லை குறைந்துவிடும். தற்போது பகலில் வெயிலின் உக்கிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

ஆனால், மாலை நேரத்தில் லேசான குளிர் நீடித்து வருகிறது. இதனால் மாலை 4 மணிக்கு மேல் கொசுக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.

நகரப்பகுதியில் கொசுக்கள் படையெடுத்து வருகிறது. நகர பகுதியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்லும் உப்பனாறு கொசுக்களின் உற்பத்தி இடமாக மாறியுள்ளது.

இங்கிருந்து நகரின் அனைத்து பகுதிக்கும் கொசுக்கள் படையெடுத்து செல்கிறது. இருசக்கர வாகனங்களை ஓட்ட முடியாதவாறு கொசுக்கள் முகத்திலும் அடிக்கிறது. இது பொதுமக்களுக்கு கடும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சியின் சார்பில் கொசுக்களை ஒழிக்க மருந்து புகை அடிக்கப்படுகிறது. இதனையும் தாண்டி கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. மருந்து புகை அடித்து சென்ற சில மணிநேரங்களில் மீண்டும் கொசுக்கள் படையெடுத்து வருகிறது.

இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, கொசுக்களின் தொல்லையை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News