செய்திகள்
சுங்கசாவடி

நீண்டநாள் கட்டணம் வசூலிக்கும் சுங்கசாவடிகளை மூடாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம்- மோட்டார் நல சங்கம்

Published On 2020-02-28 07:35 GMT   |   Update On 2020-02-28 07:35 GMT
நீண்டநாள் கட்டணம் வசூலிக்கும் சுங்கசாவடிகளை மூடாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வோம் என்று மோட்டார் நல சங்கம் அறிவித்துள்ளது.

பூந்தமல்லி:

தென் மண்டல மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச் சங்கத்தின் 26-வது நிர்வாகக் குழு கூட்டம் அதன் தலைவர் கோபால் நாயுடு தலைமையில் சென்னை வேலப்பன்சாவடியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகப்பா கூறியதாவது:-

இந்த கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தென் மாநிலங்களில் 112 சுங்கசாவடிகள் உள்ளன. 10 ஆண்டுகளாக சுங்க கட்டணம் வசூலித்து வருகிறார்கள். எனவே மத்திய அரசு காலாவதியான அனைத்து சுங்க சாவடிகளையும் ரத்து செய்ய வேண்டும். பராமரிப்பு கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய் வசூலாகி விட்டது.

எனவே தென்மாநிலங்களில் உள்ள அனைத்து சுங்கசாவடிகளையும் மூட வேண்டும். நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகமாகி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுநர்களுக்கு ஓய்வு எடுக்கும் இடங்களை அதிகப்படுத்த வேண்டும். ஒரே வரி, ஒரே இந்தியா என்பது போல இந்தியா முழுவதிற்கும் ஒரே வரி விதிக்க வேண்டும். இதனால் ஊழல் இருக்காது. மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும்.

டீசல் விலையை 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும். இதனால் லாரி உரிமையாளர்கள் பயனடைவார்கள். பாஸ்ட் டேக் முறையை இன்னும் மேம்படுத்த வேண்டும். அதில் தொழில்நுட்ப ரீதியாக குறைகள் உள்ளன. இதனால் பிரச்சனைகள் வருகின்றன.

பல இடங்களில் சர்வீஸ் சாலைகள் இல்லை. 4 வழிச்சாலைகளை 6 வழி சாலைகளாக மாற்றும் பணி முடிவடையாத நிலையில் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

எங்களின் 6 முக்கிய கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளோம். இதன் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெங்களூரில் நடைபெற உள்ள அடுத்த கூட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வோம் என்று கண்டிப்பாக அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News