செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தபோது எடுத்த படம்.

கார் தயாரிக்கும் கம்பெனிக்கு நிலம் கொடுத்தவர்கள் வேலை கேட்டு மறியல்- முத்தரசன் உள்பட 350 பேர் கைது

Published On 2020-02-28 07:11 GMT   |   Update On 2020-02-28 07:11 GMT
கார் தயாரிக்கும் கம்பெனிக்கு நிலம் கொடுத்தவர்கள் வேலை கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட முத்தரசன் உள்பட 350 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலை அமைப்பதற்காக அந்த கிராமத்தை சுற்றியுள்ள மேல்நல்லாத்தூர், பட்டறை, வெங்கத்தூர், கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் 356 ஏக்கர் சாகுபடி நிலங்கள் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்டது.

நிலம் கொடுத்த விவசாயிகள் தொடர்ந்து போராடியதையடுத்து நில உரிமையாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அப்போது இருந்த தனியார் நிறுவனம் வேலை வழங்கியது.

இந்த நிலையில் தொழிற்சாலை நிர்வாகம் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் நிலம் கொடுத்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய புதிய நிர்வாகம் உத்தரவிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து ஊழியர்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதற்கிடையே தொழிலாளர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையை கண்டித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலத் துணைத் தலைவருமான ஏ.எஸ்.கண்ணன், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தலைமையில் இன்று காலை பட்டறை பகுதியில் திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.

இதில் மாவட்ட பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் வட்டாட்சியர் விஜயகுமாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் மறியலை கைவிட மறுத்த முத்தரசன் உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News