செய்திகள்
மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத் தேர்வு

மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத் தேர்வு

Published On 2020-02-27 02:23 GMT   |   Update On 2020-02-27 02:23 GMT
தமிழகத்தில் நடப்பாண்டுக்கான பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத் தேர்வு வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, 24-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
சென்னை :

தமிழகத்தில் நடப்பாண்டுக்கான பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத் தேர்வு வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, 24-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 74 ஆயிரத்து 747 மாணவர்களும், 4 லட்சத்து 41 ஆயிரத்து 612 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுத இருக்கின்றனர். இதுதவிர 62 சிறைவாசி தேர்வர்களும் தேர்வை எதிர்கொள்ள இருக்கின்றனர். இதற்கான தேர்வு முடிவு வருகிற ஏப்ரல் மாதம் 24-ந்தேதி வெளியாக உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத் தேர்வு வருகிற 4-ந் தேதி தொடங்கி, 26-ந்தேதி வரை நடை பெற இருக்கிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 85 ஆயிரத்து 867 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 252 மாணவிகளும் எழுதுகின்றனர். இதுதவிர 100 சிறைவாசி தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு முடிவு மே மாதம் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம்(மார்ச்) 27-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 13-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதை 4 லட்சத்து 74 ஆயிரத்து 844 மாணவர்களும், 4 லட்சத்து 70 ஆயிரத்து 155 மாணவிகளும், 7 திருநங்கைகளும் எழுத இருக்கின்றனர். இதுதவிர 144 சிறைவாசி தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு முடிவு மே மாதம் 4-ந்தேதி வெளியாகிறது.
Tags:    

Similar News