செய்திகள்
கே.பி.பி. சாமி

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி காலமானார்

Published On 2020-02-27 02:08 GMT   |   Update On 2020-02-27 04:55 GMT
சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
சென்னை:

சென்னை திருவொற்றியூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் கே.பி.பி.சாமி.

இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 5 மாதங்களாக அவரது சிறுநீரக கோளாறு அதிகரித்தது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயலிசிஸ் சிகிச்சை பெற்றார். பிறகு திருவொற்றியூர் தேவி குப்பத்தில் உள்ள தன் வீட்டில் இருந்தபடி மருந்து சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. இன்று காலை 6 மணிக்கு அவர் உடல்நிலை மோசமானது. அவருக்கு முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனால் அதில் பலன் ஏற்படாமல் 6.10 மணிக்கு அவர் வீட்டிலேயே உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 57.

கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ.வின் திடீர் மரண தகவல் கேட்டு தி.மு.க. மூத்த தலைவர்கள், வடசென்னை தி.மு.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தேவி குப்பத்துக்கு சென்று கே.பி.பி.சாமி உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

கே.பி.பி.சாமியின் மகள் உதயா, கணவருடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். தந்தையின் உடல்நிலை பற்றி அறிந்ததும் சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்து பார்த்து விட்டு சென்றார். ஆஸ்திரேலியாவில் இருந்து அவர் நாளை வந்த பிறகு தான் கே.பி.பி.சாமியின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தெரிகிறது.

கே.பி.பி.சாமி திருவொற்றியூர் தொகுதியில் செல்வாக்கு மிக்க தி.மு.க. தலைவராக திகழ்ந்தார். வடசென்னை தி.மு.க. மூத்த தலைவராக இருந்த அவர் கருணாநிதியிடமும், மு.க. ஸ்டாலினிடமும் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போது தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தேவிகுப்பம் வீட்டுக்கு வந்து உடல்நலம் விசாரித்து சென்றார்.

திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு 1 லட்சத்து 58 ஆயிரத்து 204 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலின் போது அ.தி.மு.க. வேட்பாளர் குப்பனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த 2016-ம் ஆண்டு மீண்டும் வெற்றிபெற்று 2-வது முறையாக திருவொற்றியூர் எம்.எல்.ஏ. ஆக இருந்து வந்தார்.

2006-ம் ஆண்டு முதன் முதலில் எம்.எல்.ஏ. ஆனதும் கே.பி.பி.சாமிக்கு மீன்வளத்துறை அமைச்சர் பொறுப்பை கருணாநிதி வழங்கினார். 2011-ம் ஆண்டு வரை அவர் அமைச்சராக இருந்தார். மாநில மீனவர் அணி செயலாளராகவும் இருந்துள்ளார்.

1962-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி பிறந்த கே.பி.பி.சாமியின் குடும்பமே தி.மு.க. பாரம்பரியம் கொண்டது. இவரது தந்தை பரசுராமன் தி.மு.க. கவுன்சிலராக இருந்துள்ளார். தந்தை வழியில் அரசியலில் ஈடுபட்ட கே.பி.பி.சாமி வடசென்னையில் மீனவர் பகுதிகளில் தி.மு.க. பலம் பெற முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவொற்றியூரைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் மாயமான வழக்கில் கே.பி.பி.சாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சில தினங்கள் ஜெயிலில் இருந்தார்.

கே.பி.பி.சாமி மனைவி உமா. சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த தம்பதியருக்கு இனியவன், பரசுபிரபாகரன் என்று 2 மகன்கள் மற்றும் மகள் உதயா. இதில் இனியவன் கடந்த 2015-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

மகள் உதயா கணவருடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

கே.பி.பி.சாமிக்கு கே.பி சங்கர், கே.பி சொக்கலிங்கம், கே.பி.இளங்கோ என மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இதில் கே.பி.சங்கர் தி.மு.க. பகுதி செயலாளராகவும் கே.பி.சொக்கலிங்கம் வட்ட செயலாளராக உள்ளனர்.

இவரது மனைவி உமா சாமியும் கவுன்சிலராக பணியாற்றியுள்ளார். இவரது சகோதரர் கே.பி. சங்கரும் மாநகராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவரது குடும்பத்தினர் தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளனர்.

தமிழக சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 100 ஆக இருந்தது. கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ.வின் திடீர் மரணம் காரணமாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை பலம் 99 ஆக குறைந்துள்ளது.

எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் திருவொற்றியூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

2016 சட்டசபை தேர்தலில் கே.பி.பி.சாமி பெற்ற ஓட்டு விவரம் வருமாறு:-

கே.பி.பி.சாமி
(தி.மு.க.)-82,205

பி.பாலாஜி
(அ.தி.மு.க.)-77,342

(தே.மு.தி.க.)-13,463
ஆர்.வசந்தகுமாரி

(பா.ம.க.)-4,025
ஆர்.கோகுல்

(நாம் தமிழர்)-3,961

(பாரதிய ஜனதா)- 3,313.
Tags:    

Similar News