செய்திகள்
துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்

அதிமுக ஆட்சியின் சிறப்புகளை மற்ற கட்சியினர் பேசி வருவது பெருமை அளிக்கிறது- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2020-02-26 07:16 GMT   |   Update On 2020-02-26 07:16 GMT
அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்புகளை நாம் சொல்வதை விட மற்ற கட்சியினர் சொல்லி வருவது பெருமை அளிக்கிறது என்று துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.
தஞ்சாவூர்:

தஞ்சையில் திருமண விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஜெயலலிதாவின் ஆசியோடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. தஞ்சை தரணி புண்ணிய பூமி. தமிழகத்தின் உணவு தேவவையை நிறைவேற்றுவதில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு ஆற்றுகிறது.

கடந்த 2007-ல் மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் நடந்த போது காவிரி நீர் பங்கீட்டில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய ஜெயலலிதா எவ்வளவோ வலியுறுத்தினார். ஆனால் தி.மு.க.வும், காங்கிரசும் அதனை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார்.

7 ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில் காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. 33 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் என்னுடைய மிகப்பெரிய சாதனையாக காவிரி நடுவர் இறுதி தீர்ப்பு அரசாணை பெற்று தந்ததே என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதனால் தான் காவிரி தாய் என்று ஜெயலலிதா அழைக்கப்படுகிறார்.

விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை ஜெயலலிதா ஆசியோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

ஹைட்ரோகார்பன் திட்டம் வருகிறதாமே என விவசாயிகள் அச்சபட்டனர். அவர்களின் அச்சத்தை போக்கி வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார்.

அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்புகளை நாம் சொல்வதை விட மற்ற கட்சியினர் சொல்லி வருவது பெருமை அளிக்கிறது.

அடுத்தவர்களிடம் கை ஏந்தாதவர்கள் விவசாயிகள் மட்டுமே. சொந்த காலில் நிற்கும் விவசாயிகளை மு.க.ஸ்டாலினால் எதிர்த்து போராடி வெல்ல முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News