செய்திகள்
ஹைட்ரோகார்பன் திட்டம்

காவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு

Published On 2020-02-26 06:43 GMT   |   Update On 2020-02-26 06:43 GMT
புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான சுற்றுசூழல் ஆய்வுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. மேலும் ஓ.என்.ஜி.சி. தாக்கல் செய்த விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

சென்னை:

நாகபட்டினம், கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் எண்ணை மற்றும் எரிவாயு எடுப்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் விண்ணப்பித்து இருந்தது.

நாகபட்டினத்தில் 15 திட்டங்களும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் ஒரு திட்டமும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் காவிரி டெல்டா பகுதியில் உள்ள வேளாண் நிலங்களை பாதுகாக்க காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. அதற்கான சட்டம் தமிழக சட்டசபையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் அந்த மண்டலத்தில் புதிய தொழில் திட்டங்கள் தொடங்குவதற்கு அச்சட்டம் தடை செய்கிறது. மேலும் டெல்டா பகுதியில் எந்தெந்த தொழில்களை தொடங்ககூடாது என்றும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஓ.என்.ஜி.சி.யின் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான சுற்றுசூழல் ஆய்வுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. மேலும் ஓ.என்.ஜி.சி. தாக்கல் செய்த விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

புதிய திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும் பழைய திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சம்புகல்லோலிக்கர் தெரிவித்தார். மேலும் மாநில அரசின் அனுமதி இன்றி புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படாது என்று மத்திய பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.

Tags:    

Similar News