செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா போன்று எடப்பாடி பழனிச்சாமிக்கும் பட்டம் கொடுக்க ஆலோசித்து வருகிறோம்- ரெங்கநாதன்

Published On 2020-02-26 05:58 GMT   |   Update On 2020-02-26 07:36 GMT
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டதைப் போன்று எடப்பாடி பழனிச்சாமிக்கும் பட்டம் கொடுக்க ஆலோசித்து வருவதாக காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் ரெங்கநாதன் கூறியுள்ளார்.

திருச்சி:

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் இன்று திருச்சி வருகை தந்த முதல்வரை, காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் ரெங்கநாதன் மற்றும் விவசாயிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் ரெங்கநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

 
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை கெஜட்டில் வெளியிட செய்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு எங்கள் சங்கம் சார்பில் 2013ம் ஆண்டு மார்ச் 9-ந்தேதி தஞ்சையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

தற்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தால் டெல்டா பகுதி அழிந்துவிடும் என்ற கவலையில் இருந்த எங்களுக்கு டெல்டா நிரந்தரமாக இருக்கும் என்ற உறுதியை தரும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகிற மார்ச் 7-ந்தேதி திருவாரூர் அம்மா சதுக்கத்தில் பாராட்டு விழா நடத்த இருக்கிறோம்.

ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்திய போது பொன்னியின் செல்வி என்ற பட்டம் வழங்கினோம். அப்போது அது அமைந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஒரு சிறந்த செயல்வீரராக இருக்கிறார். காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பினை சேலத்தில் வெளியிட்ட உடன் சட்டமன்றத்திலும் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.

2, 3 மாதமாக இந்த திட்டத்தை ரகசியமாக வைத்து நிறைவேற்றியிருக்கிறார். ஆகவே அவருக்கும் பட்டம் கொடுக்க முடிவு செய்துள்ளோம். இது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதை பாராட்டு விழாவில் அறிவிப்போம். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடையாணை பெற்றவர் ஜெயலலிதா. 

காவிரியை அரசியல் ஆக்க வேண்டாம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திருச்சி உள்ளிட்ட பகுதிகள் விடுபட்டு இருப்பதாக சொல்கிறீர்கள். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் ஓடுகிறது. இந்த பகுதி வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டியது இன்றியமையாதது. மேலும் இந்த மண்டலத்தில் கரூர், மாயனூர், அரியலூரின் ஒரு பகுதி, கடலூர், சிதம்பரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணையும் என்று தெரிகிறது. இந்த சட்ட முன்வடிவு இரு தினங்களில் வெளியாகும். அப்போது உங்களுக்கு தெரியும். முதல்வர் யோசித்துதான் முடிவெடுத்துள்ளார். 

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News