செய்திகள்
சென்னை மாநகராட்சி

மெரினா கடற்கரை-பெசன்ட் நகருக்கு உயர்மட்ட பறக்கும் சாலை: சென்னை மாநகராட்சி

Published On 2020-02-25 06:31 GMT   |   Update On 2020-02-25 06:31 GMT
மெரினா கடற்கரை - பெசன்ட் நகருக்கு 25 நிமிடங்களில் செல்லும் வகையில் உயர்மட்ட பறக்கும் சாலை மாநகராட்சி சார்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மாநகரத்தில் நாளுக்கு நாள் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சென்னை மெரினா பீச் ரோட்டில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் சென்னை மாநகராட்சி சார்பில் பீச் ரோட்டில் வாகனங்கள் விரைவாக செல்ல மெரினா கடற்கரை - பெசன்ட் நகருக்கு உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்ட மதிப்பீடு தயாரித்து வருகிறார்கள்.

மெரினா கடற்கரை - பெசன்ட் நகருக்கு 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடற்கரையோரம் வழியாக இந்த உயர்மட்ட பறக்கும் சாலை உருவாக்கப்படுகிறது. 25 நிமிடங்களில் வாகனங்கள் பெசன்ட் நகருக்கு செல்லலாம்.

மும்பையில் பாந்த்ரா - ஓர்லி கடற்கரை யோரத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பறக்கும் சாலை போல சென்னையிலும் கட்டப்படுகிறது.

இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விரைவாக சென்றடையும் சென்னை கடற்கரை சாலையில் தற்போது மணிக்கணக்கில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகள் குறையும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை கடற்கரை சாலையில் காலை, மாலையில் ‘பீக் அபர்ஸ்’ நேரங்களில் கடும் வாகனபோக்கு வரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வாகனங்கள் பல மணி நேரம் போக்குவரத்து நெருக்கடியால் சிக்கி திணறி வருகின்றன.

இதை கருத்தில் கொண்டு சென்னை மெரினா கடற்கரை - பெசன்ட் நகருக்கு கடற்கரையோரமாக உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கப்படும்.

மும்பை மாநகர கடற்கரையோர உயர்மட்ட பாலம் போல் இது அமைக்கப்படும். இதில் வாகனங்கள் விரைவாக செல்ல முடியும். இதனால் கடற்கரை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். பொது மக்கள், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இது அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News