செய்திகள்
மெட்ரோ ரெயில்

மெட்ரோ ரெயிலில் இறைச்சி-மீன் கொண்டு செல்ல தடை

Published On 2020-02-25 06:22 GMT   |   Update On 2020-02-25 06:22 GMT
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் இறைச்சி, மீன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்று மெட்ரோ ரெயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை:

மெட்ரோ ரெயில் பயணிகளை கவருவதற்காக அந்த நிறுவனம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.

சென்னை நகரில் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்யலாம். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குறைந்த நேரத்தில் செல்லலாம்.

இது போன்ற பல்வேறு காரணங்களால் சென்னை நகரில் மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் சராசரியாக ஒரு லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கிறார்கள்.

வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்ல, வியாபாரம் செய்பவர்களும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கிறார்கள். மார்க்கெட்டில் இருந்து வீட்டுக்கு பொருட்களை வாங்கிச் செல்பவர்களும் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துகிறார்கள்.

சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் மீன்கள் புதிதாக கிடைக்கிறது. இங்கு மீன், இறைச்சி வாங்குபவர்கள் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பயணம் செய்ய முடியவில்லை.

இதுபோன்று மற்ற மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் இறைச்சி, மீன் கொண்டு செல்ல தடை உள்ளது. எனவே இறைச்சி, மீன் கொண்டு வருவோர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியாது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெட்ரோ ரெயிலில் இறைச்சி, மீன், இறந்த பறவைகள், விலங்குகள் போன்றவற்றை கொண்டு செல்ல தடை உள்ளது. 2014 மெட்ரோ ரெயில் விதியின்படி இந்தியா முழுவதும் உள்ள மெட்ரோ ரெயில் நிலைய வளாகம் மற்றும் ரெயிலில் இந்த தடை உள்ளது.

இறைச்சி மற்றும் அழுகும் பொருட்களை மெட்ரோ ரெயிலில் கொண்டு போக முடியாது. பயணிகள் வசதியாக செல்வதற்காகவே மெட்ரோ ரெயில் சேவை உள்ளது. எனவே, பெரிய சாக்கு மூட்டைகளில் வியாபார பொருட்களை கொண்டு செல்லவும் அனுமதி இல்லை. இறைச்சி, மீன் போன்றவற்றை கொண்டு சென்றால் ‘ஸ்கேன்’ எந்திரத்தில் தெரிந்து விடும். அதனால் பயணத்திற்கு முன்பே தடுத்து நிறுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News